×

சேலம் சுற்றுப்புறங்களில் தொடரும் அவலம் கோடை வெயிலால் கருகும் பயிர்கள்

* தண்ணீரை விலைக்கு வாங்கி காப்பாற்ற போராடும் விவசாயிகள்  

சேலம் : சேலம் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெயிலால் பயிர்கள் கருகி வருகிறது. இதனை தடுப்பதற்காக விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, மன்னார்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 5ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கோடை வெயிலின் தாக்கதால் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள், சோளங்கள் காய்கறிகள் மற்றும் பூக்கள் தண்ணீரில்லாமல் கருகி வருகிறது. இதேபோல் மாடுகளுக்கு தீவனம் கிடைப்பதிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களை காக்க விளைநிலங்களிலும், தீவனங்கள் வளர்க்க தரைப்பகுதிகளிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் ஊற்றி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்க்காமல் பெய்தால், தண்ணீருக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பருவமழை பொய்த்து விட்டது. அதோடு தற்போது கோடை வெயிலும் கொளுத்துவதால் வறட்சி தாண்டவமாடுகிறது. அதிலும் மன்னார்பாளையம் சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஏரி, குளம், கிணறுகள், குட்டைகள் என்று அனைத்தும் வறண்டு கிடக்கிறது.

அதேபோல் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள புது ஏரியில் கடந்த இரு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். குடிநீருக்கும் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். மழையை எதிர்பார்த்து பயிர்களை சாகுபடி செய்தோம்.  ஆனால் மழை பொய்த்துவிட்டது. இதனால் பணம் கொடுத்து டிராக்டர் மூலமாக தண்ணீர் வாங்கி, பயிர்களுக்கு விடுகிறோம். ஒரு டிராக்டர் தண்ணீர் ₹900 க்கு வாங்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு 2 முதல் 3 டிராக்டர் விலைக்கு வாங்கப்படுகிறது. பாடுபட்டு சாகுபடி செய்த பயிர்களை பாதுகாக்க, பல்வேறு சிரமங்களையும் அனுபவித்து வருகிறோம்,’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem ,areas , summer , salem, lorry water, crops
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை