×

இன்று சர்வதேச தீயணைப்பு படை வீரர்கள் தினம் ‘தீயாய்’ வேலை செய்யணும்...

வீட்டுல கொள்ளை நடந்தால் 100க்கு போன் பண்ணுவோம்... விபத்துல அடிபட்டு காயமா? 108ஐ டயல் பண்ணுவோம். வீடு, காடு தீப்பிடிச்சு எரியுதா? உடனே நாம கண்ணை மூடிக்கிட்டு அடிக்கிற எண்தான் 101. அது அர்த்த ஜாமமோ, அதிகாலையோ எந்த நேரமாய் இருந்தாலும், தீப்படித்த தகவல் தெரிந்தால், ‘தீயாய்’ களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர்கள்தான் தீயணைப்பு வீரர்கள்.

சிவப்பு லாரி, அதில் பெரிய டேங்கில் தண்ணீர், கடகடவென மணி சப்தம், 10க்கும் மேற்பட்ட வீரர்கள், தேவைப்பட்டால் கூடுதல் பேர் என களமிறங்கும் அவர்கள்தான், நம்மை அக்னியில் இருந்து காப்பாற்ற பிறந்த ஆபத்பாந்தவன்கள். அது மட்டுமா? ஆற்றில், கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, பேரிடர் காலங்கள், இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளையும் அல்லவா சேர்த்து செய்கிறார்கள். நமது பிரச்னைகளை தீ்ர்க்க உதவுவரை காவலர் என்கிறோம்.

ஆனால், உயிரையும் துச்சமென மதித்து, தீயோடு போராடி நமது சொத்துக்களை, பல உயிர்களை காப்பாற்றும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறையினரை நாம் பெருமையுடன் வீரர்கள் என்றே அழைக்கிறோம். ‘துணிச்சல் மிக்க சூரர்கள்’ என்றும் கூட இவர்களை குறிப்பிடுகிறார்கள். இப்படி நமக்காக நேரம், காலம் பார்க்காமல் களமிறங்கும் இவர்களை போற்றும்விதமாக ஆண்டுதோறும் மே 4ம் தேதி ‘சர்வதேச தீயணைப்பு படை தினம்’ என அழைக்கப்படுகிறது.

ஏன் மே 4ம் தேதி என்கிறீர்களா? அதுக்கு ஒரு ரீவைண்ட் போகலாமா? ஆஸ்திரேலியாவில் உள்ள மேற்கு விக்டோரியாவில் கடந்த 1998ம் ஆண்டு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 660 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவிய காட்டுத்தீயில் பயிர்கள், அரிய மரங்கள், பொருட்கள் நாசமாயின. ஆஸ்திரேலிய நாட்டையை உலுக்கிய இந்த பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ‘சர்வதேச தீயணைப்பு படை வீரர்கள்’ தினத்தை அனுசரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரால் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்தே, 1999ம் ஆண்டு மே 4ம் தேதி முதல் தீயணைப்பு படை வீரர்கள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி காட்டுத்தீ விபத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? 20க்கும் மேற்பட்டோர் பலியான அந்த கோர சம்பவத்தில் வனத்துறையினரோடு, தீயணைப்பு படை வீரர்களும் இணைந்து போராடிய விதத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? மின்கசிவு, மர்ம நபர்களின் தீ வைப்பு சம்பவங்களால் நாள்தோறும், இவர்களின் பணி பரபரப்பான ஒன்றாகவே மாறி விட்டது.

பட்டாசு ஆலைகள், தீப்பிடித்த அடுக்கு மாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டும், பசியை மறந்து பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றும், அந்த வீரர்கள் இந்த நாளில் மட்டுமல்ல... எந்த நாளிலுமே போற்றி பாராட்டப்பட வேண்டியவர்கள்...!

‘சம்பளத்தை உயர்த்துங்க’

நேரங்காலம் பார்க்காமல் உழைக்கும் தீயணைப்புத்துறையில், தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல.. தங்களுக்கான ஊதியமும் திருப்திகரமாக இல்லையென தீயணைப்புத்துறை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ராணுவ வீரர்கள், போலீஸ்க்கு நிகராக களப்பணியாற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு, போதிய ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : International Firefighters Day , International Firefighter's Day ,Firefighter
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...