×

சிவகங்கை மாவட்டத்தில் கழுதைப்பால் விற்பனை கனஜோர்

* ஒரு சங்கு ரூ.50 ரூபாய்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கழுதைப்பால் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கழுதைப்பால் விற்பனைக்காக கடலூர் மாவட்டம் தொழுதூரிலிருந்து 5க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 12 கழுதைகளோடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் முகாமிட்டுள்ளனர். கழுதைப் பாலை கிராம பகுதிகளில் ஒரு சங்கு ரூ.50 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்.

alignment=


 சிவகங்கை அருகே இந்திராநகர், ஊத்திகுளம் கூத்தாண்டன், சாத்தரன்கோட்டை, செங்குளம் உள்ளிட்ட சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் கிராமம் கிராமமாக கழுதைகளை அழைத்துக்கொண்டு செல்கின்றனர். நோய் தொற்று தடுக்கவும், ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கழுதைப்பாலை வாங்கும் ஆர்வம் இன்னும் கிராமங்களில் உள்ளது. கழுதைப்பால் மருந்து போன்று கருதப்படுவதால் ஒரு சங்கு அளவு பால் மட்டும் கறந்த சூடு மறைவதற்குள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நாட்கள் முகாமிட்டு இவர்கள் பால் விற்பனையை செய்து வருகின்றனர் கடலூர் மாவட்டத்தில் இருந்து வேன் மூலமாக கழுதைகள் கொண்டுவரப்பட்டு சிவகங்கை வந்து சுற்று வட்டார கிராம பகுதிகளில் முகாமிட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது: கழுதைப்பால் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொடுக்கிறோம். ஆடு, மாடு என மற்ற பாலைப்போல் தான் இதுவும். ஆனால், இப்போது கழுதைகளை பார்ப்பது அரிதாக உள்ளது. எப்போதாவது குறைவாக கிடைக்கிறது. அதனால் சங்கு அளவு கொடுக்க வேண்டியுள்ளது என்றனர்.

சீராளன்(பால் விற்பவர்) கூறியதாவது:  கழுதைப் பாலை பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்வதை ஆண்டுதோறும் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் விற்பனை செய்து வருகிறோம். உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். குழந்தைகளுக்கு இப்பால் நல்லது.  இதில் மோசடி எல்லாம் இல்லை. கறந்தவுடன் அப்படியே சிறியவர்களுக்கு கொடுக்கும் வகையில் வழங்குகிறோம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இப்பகுதியில் கழுதை பால் விற்பனை படு மந்தமாக உள்ளது என்றனர். சில நாட்கள் இப்பகுதி கிராமங்களில் விற்பனை முடித்துவிட்டு வேறு பகுதிக்கு செல்வோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ganjore ,district ,Sivagangai , Sivagangai ,Donkey Milk ,sale
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்