×

தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம்,..வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும்,..29-ம் தேதி வரை நீடிக்கும்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று முதல் தொடங்கி 29ம் தேதி வரை நீடிக்கும். சுமார் 26 நாட்கள் சுட்டெரிக்கப் போகும் வெயிலின் முன்னோட்டமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 2 நாட்களாக சென்னையில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது. இதனால், இரவு நேரத்தில் மக்கள் தூங்குவதற்கு சற்று சிரமம் அடைந்தனர். இந்த காலக்கட்டத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுவாக இந்த அக்னி நட்சத்திர காலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படும்.


அதனால் சூரியனின் கதிர்கள் விழும் போது அதிக வெப்பமாக தெரியும். இப்படி பூமியானது சூரியனை ஒரு புள்ளியில் இருந்து சுற்றத் தொடங்கும் இந்த காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் காலம் என்று வழக்கத்தில் கூறப்படுகிறது. இந்த காலத்தில் வெயலின் பாதிப்பும் அதிகம்  இருக்கும். கடும் வறட்சி நிலவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதுகாப்புடன்  இருக்க வேண்டிய காலம். இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் இன்று தொடங்கி 29ம் தேதி வரை சுமார் 26 நாட்கள் வாட்டி வதைக்கப் போகிறது. இதற்கு முன்னோட்டமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது.


திராவகத்தை முகத்தில் ஊற்றியது போன்ற எரிச்சலை மக்கள் உணர்ந்தனர். பகலில் அனல் காற்று வீசியது. இது தவிர சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 108 டிகிரியும், மதுரை 106 டிகிரி, கடலூர், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருச்சி ஆகிய இடங்களில் 104 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பகலில் வெளியில் செல்லவே மக்கள் அச்சப்பட்டனர். இந்நிலையில், வங்கக் கடலில் ஒரு வாரமாக மெல்ல நகர்ந்த பானி புயல் நேற்று மதியம் 12. 30 மணி அளவில் ஒடிசாவில் பூரி அருகே கரை கடந்து சென்றதால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டது. அதனாலும் காற்றின் வெப்பம் அதிகமாக இருந்தது. வரும் 26 நாட்களுக்கும் வெயிலின் தாக்கம் இதே அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,star , Tamilnadu, Agni star, heat
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...