×

அரசு யோகா மருத்துவமனையில் சாதாரண மக்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற முடியாத நிலை: ஐஏஎஸ் அதிகாரிகளின் உறவினர்கள், விஐபிக்கள் ஆக்கிரமிப்பு

* யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் ஒரு வாரத்திற்கு 5க்கும் மேற்பட்ட தற்போது பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்கள் வருவது மட்டுமல்லாமல், அவர்களுடைய உறவினர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிகிச்சைக்காக வரும் சாதாரண மக்களை அங்குள்ள ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

சென்னை: அரசு யோகா மருத்துவமனையில் சாதாரண மக்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் முக்கியமான விஐபிக்கள் அறைகளை ஆக்கிரமித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக சித்தா பிரிவில் 150 படுக்கைகள், ஆயுர்வேதா பிரிவில் 100 படுக்கைகள், யுனானி பிரிவில் 50 படுக்கைகள், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 100 படுக்கைகளில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்தா, ஆயுர்வேதா, யுனானி பிரிவுகளில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சைக்காக வரும் சாதாரண மக்கள் டாக்டரை பார்த்து உள்நோயாளிகளாக உடனே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை பிரிவில் உள்ள 100 படுக்கை கொண்ட உள்நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்றுதான் அதிகம் பேர் சிகிச்சைக்கு  வருகின்றனர். அவ்வாறு சிகிச்சைக்காக வருபவர்கள் அதிகம் பேர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், தற்போது பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் உறவினர்கள், முக்கிய விஐபிகள்தான் அதிகம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.  மேலும் சாதாரண மக்கள் சிகிச்சைக்காக வரும்போது அறைகள் எதுவும் காலியாக இல்லை என்றும், காலியானதும் உங்களுக்கு போன் செய்கிறோம், அதன்பிறகு வாருங்கள் என்று கூறி செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு போன் எதுவும் செய்வதில்லை.

ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகளின் உறவினர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரியின் பரிந்துரையில் வருபவர்களுக்கு மட்டும் அங்கு பணிபுரியும் டாக்டர்கள் முன்கூட்டியே அறைகளை புக்கிங் செய்து வைத்து உடனடியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். அதேபோன்று தங்களுடைய உறவினர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அறைகளை புக்கிங் செய்து வைத்து உள்நோயாளிகளாக அனுமதி பெற்றுக் கொள்கின்றனர். இதனால் சாதாரண மக்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை எடுப்பது சிரமமாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,relatives ,Yoga Hospital ,IAS officers ,VIPs , Government Yoga Hospital, People, Inpatients, VIPs
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...