×

4 தொகுதி இடைத்தேர்தலில் தமிழிசை, எச்.ராஜா, ஜான்பாண்டியன் பிரசாரத்துக்கு தடை: அதிமுக அதிரடி நடவடிக்கை

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலில் தமிழிசை, எச்.ராஜா, ஜான்பாண்டியன் ஆகியோரின் பிரசாரத்துக்கு அதிமுக தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. கூட்டணி கட்சிகள் இடம்பெற்றிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பிரசாரத்திற்காக தமிழகம் வந்தனர்.ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் யாரும் மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இது அதிமுக தலைமைக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. ஏன்தான் இவர்களை கூட்டணியில் சேர்த்தோம் என்ற நிலைக்கு அதிமுக ஒரு கட்டத்தில் வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. 4 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று வரை பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்களா என்ற கேள்வி தற்போது அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், 4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் ஆகியோருக்கு அதிமுக தலைமை “திடீரென” தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.  நாங்களே 4 தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பலை வீசி வருகிறது. தமிழகத்தில் கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மனதில் இன்றும் இருந்து வருகிறது. மேலும் தமிழகத்திற்கு தேவையான எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களை திணிப்பதிலேயே மத்திய அரசு குறியாக இருந்து வருகிறது என்று மக்கள் மத்திய பாஜ அரசு மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல், தமிழிசை சவுந்தரராஜனுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் அவரை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கிடைக்கும் ஓட்டுக்களும் கிடைக்காமல் போய் விடும் என்று அதிமுக தலைமை கருதி வருகிறது. அதே நேரத்தில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இதுவும் மக்கள் மனநிலையை மாற்றும் என்றும் அதிமுக கருதுகிறது. அதே போல ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமிக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.  எனவே, ஜான்பாண்டியனை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் நன்றாக இருக்காது என்று அதிமுக கருதுகிறது. இதுவே இந்த 3 பேருக்கும் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 3 பேருக்கும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,H Raja ,Janpandian ,AIADMK ,elections ,Lok Sabha , 4 constituency by-election, Tamilisai, h raja, janpantiyan, AIADMK
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக...