×

பிளே ஆப் சுற்றில் மும்பை கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு...ரோகித் பெருமிதம்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் பிளே ஆப் சுற்றில் விளையாட, மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
வாங்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் டாசில் வென்று முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. டி காக் 69*, ரோகித் 24, சூரியகுமார் 23, ஹர்திக் 18 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது. சாஹா 25, கப்தில் 15, ஷங்கர் 12, முகமது நபி 31 ரன் எடுக்க, மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 71 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இதைத் தொடர்ந்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. பூம்ரா வீசிய ஓவரில், 4 பந்தில் 2 விக்கெட் இழந்த சன்ரைசர்ஸ் 8 ரன் மட்டுமே சேர்த்தது.

அடுத்து ரஷித் கான் வீசிய சூப்பர் ஓவரை மும்பை வீரர்கள் ஹர்திக், போலார்டு எதிர்கொண்டனர். முதல் பந்தையே ஹர்திக் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் அவர் 1 ரன் எடுக்க, 3வது பந்தில் போலார்டு 2 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியதுடன் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது (13 போட்டியில்16 புள்ளி). இது குறித்து மும்பை கேப்டன் ரோகித் கூறியதாவது: இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலுமே நாங்கள் கடினமான உழைப்பை வெளிப்படுத்தினோம். அதற்கு கிடைத்த சரியான பரிசு தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பு. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளோம். அதற்கான நல்ல முடிவும் கிடைத்துள்ளது.

முதலில் பேட் செய்து சவாலான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை சாய்த்தால் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என நம்பினோம். ஆனால், மணிஷ் பாண்டே சிறப்பாக பேட் செய்தார். ஸ்பின்னர்கள் வீசிய எட்டு ஓவர்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. பூம்ரா பந்துவீச்சு அமர்க்களமாக இருந்தது. சூப்பர் ஓவரையும் கூட பதற்றமின்றி வீசினார். டி காக் உறுதியுடன் பேட் செய்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு ரோகித் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumbai ,Playoffs ,round , Rohit, IPL T20, Playoff
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...