×

மோடியை மிரட்டிய பானி: பிரசார கூட்டம் ஒத்திவைப்பு

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலமான ஜார்கண்டில் மொத்தமுள்ள 14 மக்களவை தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு சத்ரா, லோகர்தாகா, பாலமு ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ல் முடிந்து விட்டது. 2ம் கட்டத் தேர்தல் கோதர்மா, ராஞ்சி, குந்தி, ஹசாரிபாக் மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் நடக்கிறது. மே 12ல் மூன்றாம் கட்ட தேர்தல் நடக்க உள்ள தன்பாத், ஜாம்ஷெட்பூர், கிரிதி, சிங்பும் தொகுதிகளின் மீதுதான் தேசிய கட்சிகள் கண் வைத்துள்ளன. இந்தி பேசும் மாநிலமான இங்கு, முடிந்தளவுக்கு அறுவடை பார்த்து விடவேண்டும் என்று பாஜ வேலை பார்க்கிறது.  கடந்த தேர்தலில் இங்கு மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 12ஐ பாஜ கைப்பற்றியது. அதை குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ‘‘2014 தேர்தலில் மோடி அலை வீசியது. இந்த 2019 தேர்தலில் மோடி சுனாமி வீசப்போகிறது...’’ என்று புளகாங்கிதத்துடன் இங்கு பேட்டி கொடுத்தார்.

‘‘அவர் சுனாமியா இருக்கட்டும். ஆனால், அந்த சுனாமியை இம்முறை புயல் மிரட்டி அச்சுறுத்தி விட்டது. தேர்தல் முடிவும் அதை உறுதிப்படுத்தும்..’’ என்று காங்கிரஸ், ஜேஎம்எம் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) கட்சியினர் கவுன்ட்டர் கொடுத்திருக்கிறார்கள். சும்மா வார்த்தை ஜாலத்துக்காக இப்படி பேசவில்லை. நிஜமாகவே, மோடியின் பிரசாரக் கூட்டம் புயலால் பாதிக்கப்பட்டு, நேற்று ஒத்திவைக்கப்பட்டது.  சிங்பும் தொகுதிக்குட்பட்ட சாய்பாசா பகுதியில் வரும் ஞாயிறன்று (மே 5) பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு முடிவாகியிருந்தது. ஆனால், பக்கத்து மாநிலம் ஒடிசாவை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் பானி புயல் அச்சுறுத்தல் காரணமாக, மோடி பிரசார கூட்டத்தை ஒருநாள் (மே 6க்கு) தள்ளி வைத்து விட்டார்கள். ‘‘ஒரு பேச்சுக்கு சுனாமின்னு பில்டப் கொடுத்தா, நிஜ புயலே வந்து மிரட்டீருச்சே...’’ என்று உள்ளூர் தாமரைகள், உள்ளுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

மே 24ம் தேதி வெளியாகிறது ‘பிஎம் மோடி’
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்து விட்டது. இதனால், மோடி படம் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த திரைப்படம்  மே 24ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bani ,Prasanna ,Modi ,meeting , Modi, Bani, campaign meeting
× RELATED சித்திரை திருவிழா: மதுரை தல்லாகுளம்...