×

தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி தண்ணீரை சேமிக்க போராடும் முதியவர்

மும்பை: தண்ணீர் சேமிப்புக்காக 84 வயது முதியவர் ஒருவர் தனியாளாக போராடி வருகிறார். மகாராஷ்டிராவை சேர்ந்த ஆபித் சுர்தி(84) என்பவர் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், பெயிண்டராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர் 80 புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதோடு தனது ஓவியங்களை 16 இடங்களில் கண்காட்சிக்கு வைத்துள்ளார். தற்போது தண்ணீர் சேமிப்புக்காக பாடுபட்டு வருகிறார். 2007ம் ஆண்டு ‘‘சேவ் எவரி டிராப் ஆர் டிராப் டெத்’’  என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஒவ்வொரு வீடாக சென்று தண்ணீர் சேமிக்கவேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து ஆபித் சுர்தி கூறியதாவது; எனது குழந்தை பருவத்தில் சால் வீடு ஒன்றில் வசித்து வந்தேன். காலையில் தண்ணீர் பிடிப்பது என்பது மிகவும் வேதனையானது.  ஒரு வாளி தண்ணீருக்காக காலையிலேயே மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். இதனை தினமும் பார்த்து வந்தேன்.

இதுவரை அதனை நான் மறக்கவில்லை. எனவேதான், 2007ம் ஆண்டு தொண்டு நிறுவனத்தை தொடங்கி தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன். இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று தண்ணீர் கசிவை சரி செய்து கொடுத்துள்ளேன். அதோடு அவர்களிடம் ஒவ்வொரு துளி தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து புரிய வைத்துள்ளேன். எங்களது தொண்டு நிறுவனத்திற்கு தனி அலுவலகம் எதுவும் கிடையாது. இப்பணியை தொடங்கிய போது எங்களிடம் போதுமான நிதியும் இல்லை. ஆனால் மக்கள் எங்களுக்கு உதவி செய்தனர். பிளம்பர் என்னுடன் இலவசமாகத்தான் வேலை செய்தார். திடீரென ஒரு இடத்தில் இருந்து 11 லட்சம் நிதி கிடைத்தது. இதன் மூலம் நிதிப்பிரச்னை தீர்ந்தது. அந்த நிதியின் மூலம் தண்ணீரை சேமிக்கவேண்டியதன் அவசியம் குறித்து போஸ்டர்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் தயாரித்து ஓட்டினேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : volunteer ,charity organization , Charity company, water, fighting elderly
× RELATED சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு...