×

ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை துவங்கியது

நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார், தங்களது விசாரணையை துவக்கியுள்ளனர். நேற்று நாமக்கல் மாவட்ட எஸ்பியை நேரில் சந்தித்து, சிபிசிஐடி விசாரணை அதிகாரி மற்றும் குழுவினர் ஆலோசனை நடத்தினர். கைதான நர்ஸ் உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை சம்பவம் சமீபத்தில் அம்பலமானது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த,  ராசிபுரத்தை சேர்ந்த நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கொல்லிமலை மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த 18 பச்சிளம் குழந்தைகள், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும், பல ஊர்களில் புரோக்கர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. வறுமையில் உள்ள பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை, குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாமல் ஏங்கும் வசதி படைத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

பெண் புரோக்கர்களாக செயல்பட்ட ஈரோட்டை சேர்ந்த பெண்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளர். சேலம் இன்ஸ்பெக்டர் சாரதா, நாமக்கல் இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோரும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்து  எஸ்பி அருளரசுவை சந்தித்தனர். அப்போது ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா, நாமக்கல் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கின் விசாரணை ஆவணங்களை ஒப்படைத்தனர். அதை சிபிசிஐடி போலீசார் பெற்றுக்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த வழக்கு குறித்து எஸ்பியுடன், சிபிசிஐடி போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த டிஎஸ்பி கிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து, வேகமாக சென்றுவிட்டார். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குழந்தைகள், தற்போது எந்த முறையில் வளர்க்கப்பட்டு உள்ளனர் என்பதை, பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் கண்டறிய உள்ளனர். மேலும் வளர்ப்பு பெற்றோர்களை இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், சிறையில் உள்ள 8 பேரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் உள்ளனர். இதற்காக சட்ட நடவடிக்கையில் இறங்க உள்ளனர். சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரம் ஆகும்போது இந்த வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBCID ,investigation ,children ,kidnapping , CBCID investigation ,issue of kidnapping children,Raibipuram
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...