வில்லிவாக்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய கார் மோதி மூதாட்டி உள்பட 2 பேர் பலி

சென்னை: வில்லிவாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மது போதையில் விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் உரிமையாளரை பொதுமக்கள் மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை 8.15 மணியளவில் ஒரு கார் அதிவேகமாக சென்றது. திடீரென அந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோர மின் பெட்டி மீது உரசியபடி சென்றது. இதை பார்த்து, அங்குள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் காரை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை வளைவில் அதிவேகமாக திரும்பிய கார், அங்கு வந்த பெண் உள்பட இருவர் மீது மின்னல் வேகத்தில் மோதிவிட்டு, சிறிது தூரத்தில் நடந்து வந்த மற்றொரு மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காருடன் அந்த மூதாட்டி சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். பிறகு அங்குள்ள மின்கம்பத்தில் மோதி கார் நின்றது. இந்த விபத்தில், அன்னை சத்யா நகரை சேர்ந்த சரசா (65) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆதிலட்சுமி (50), மோகன் (40) ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 2 பேர் தப்பி ஓடினர். ஒருவர் குடிபோதையில் இருந்தார். அவரை வெளியே இழுத்து போட்டு பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் போதை ஆசாமி ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், வில்லிவாக்கம் கிழக்கு மாடவீதியை சேர்ந்த தேவேந்திரன் (40), டிராவால்ஸ் உரிமையாளர் என்பதும் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவேந்திரனை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்குதலால் படுகாயமடைந்த தேவேந்திரனை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சை முடிந்ததும் போலீசார் தேவேந்திரனை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தீவிரமாக தேடுகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தக்கலை அருகே பரபரப்பு: தாறுமாறாக ஓடி...