×

காவிரி குடிநீரில் அமோனியா பாஸ்பேட் அளவு அதிகரிப்பு

* மேட்டூர் அணையில் நடந்த ஆய்வில் கண்டுபிடிப்பு

மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து சேலம்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு செல்லும் குடிநீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாக எழுந்த புகாரின்பேரில், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், காவிரி நீரை மாதிரி எடுத்து ஆய்வு செய்தனர். இதில், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரில் அமோனியா, பாஸ்பேட் அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து சேலம்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, தினமும் 70 மில்லியன் லிட்டர் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. தொட்டில்பட்டியில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தில், தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தினசரி 64 மில்லியன் லிட்டர் குடிநீர், விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 1,345 வழியிடை கிராமங்கள் பயன் பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் எழுந்தது. கடந்த வாரம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர், கடும் துர்நாற்றத்துடன் நிறம் மாறி வந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள், அதனை பாட்டில்களில் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து பாசன கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரை, குடிநீர் பயன்பாட்டிற்கு திருப்பி விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீர் பகுப்பாளர் கோபால் தலைமையிலான குழுவினர், நேற்று சென்னையிலிருந்து மேட்டூர் வந்தனர். பின்னர், குடிநீர் எடுக்கப்படும் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். உதவி நீர் பகுப்பாளர் பராபர செந்தில், மேட்டூர் உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசங்கர் உள்ளிட்டோர், நீர் மாதிரியை எடுத்து சம்பவ இடத்திலேயே ஆய்வு செய்தனர்.

இதில், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரில் அமோனியா, பாஸ்பேட் அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீர் பகுப்பாளர் கோபால் கூறுகையில், ‘காவிரி ஆற்று  நீரில் அமோனியா லிட்டருக்கு 0.5 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 1 முதல் 1.5 மில்லி கிராம் அமோனியா உள்ளது. அதேபோல், பாஸ்பேட் என்பதும் சுத்தமாக இருக்க கூடாது.

ஆனால், 2 மில்லி கிராம் கலந்துள்ளது. மற்றபடி அமில, காரத் தன்மை, இரும்பு சத்து, ஆக்ஸிஜன் உள்ளிட்டவை சரியான அளவில் உள்ளது. அமோனியா மற்றும் பாஸ்பேட் அதிகளவு  கலந்துள்ளதாலேயே, தண்ணீர் நிறம் மாறியதுடன் துர்வாடையும் வீசுகிறது. மேலும், அமோனியா, பாஸ்பேட் அளவுகளை குறைக்கும் வகையில், உரிய சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cauvery , Amonia Passpate, cauvery, salem aathur,mettur dam
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது