×

ஓராண்டாகியும் என்சிஎம்எஸ் பார்க்கிங் தளம் அமைப்பதில் தாமதம்

* சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி : ஊட்டியில் என்சிஎம்ஸ்., பார்க்கிங் தளம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வந்த போதிலும், இன்னும் முழுமை பெறவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.

 தனியார் பஸ்கள் மற்றும் வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்றவாறு பூங்கா செல்லும் சாலையில் உள்ள என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் அமைக்கப்பட்டது. இங்கு சுமார் 100 பஸ்கள், 200 வேன்கள் வரை நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு கட்டண அடிப்படையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ஆண்டு முழுக்க கூட்டுறவுத்துறைக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.  

இந்நிலையில், இந்த பார்க்கிங் தளத்தை சீரமைக்க கடந்த ஆண்டு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு  கடந்த ஜூன் மாதம் முதல் இந்த பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஓராண்டுகளாக இப்பணிகள் துவக்கப்பட்டு இது வரை முழுமை பெறவில்லை. தற்போது உள்ள பார்க்கிங் தளத்தை சமன் செய்து இன்டர்லாக் கற்கள் பொருத்தும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், கடந்த ஓராண்டாக சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாமல், மெத்தனமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், சீசன் துவங்கிய நிலையில், ஊட்டி வரும் வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் இல்லாத நிலையில், பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு, கடந்த வாரம் வாகனங்களை நிறுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.

ஆனால், தற்போது வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுவதாக கூறி வாகனங்களை உள்ளே நிறுத்த என்சிஎம்எஸ்., நிறுவனம் தடை விதித்துள்ளது. இதனால், அனைத்து வாகனங்களும் தனியார் பார்க்கிங்கில் அதிக கட்டணம் கொடுத்து வாகனங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 இந்த பார்க்கிங் தளம் அமைக்கும் தாமதம் ஏற்பட்டு வருவதற்கு கமிஷன் பிரச்னையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த பணிகளை துவக்கும் போது இருந்த தலைவர் இப்போது இல்லை. தற்போது புதிதாக ஒரு தலைவர் பொறுப்பேற்றுள்ளார். தலைவர்கள் மற்றும் அவ்வப்போது மாறும் அதிகாரிகளுக்கு போதுமான கமிஷன் செல்லாத நிலையில், பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டால் பல உண்மைகள் அம்பலமாக வாய்ப்புள்ளது. ேமலும், வெகு தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க போதுமான வசதிகள் இல்லை.

குறிப்பாக பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தி தராத நிலையில், ஊட்டிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் புலம்பியபடியே திரும்புகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஊட்டி நகரில் பார்க்கிங் தளம், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், குடிநீர் போன்ற பிரச்னைகளில் அக்கறை காட்டுவது மிக அவசியம். சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் உள்ளதால், வரும் காலங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் குறைய வாய்ப்புள்ளது.

கழிப்பறை வசதி இல்லை

பொதுவாக சுற்றுலா தலங்களில் உள்ள பார்க்கிங் தளங்களில் பெண்களுக்கு என தனி கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் வசதி போன்றவைகள் இருக்கும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு பார்க்கிங் தளத்திலும் இந்த வசதிகள் இல்லை. ஊட்டியில் உள்ள பிரிக்ஸ், அசெம்பளி, ஆவின், சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், காந்தல் உட்பட எந்த பார்க்கிங் தளத்திலும் அடிப்படை வசதிகள் கிடையாது. இதனால், ஊட்டிக்கு சுற்றுலா வரும் வசதி படைத்தவர்கள் தவிர நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பஸ்கள் மற்றும் வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ooty, MNCS parking, Neelagiri
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...