×

நகராட்சி பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

* பெண்கள் முற்றுகையால் பரபரப்பு

காரைக்குடி : காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்பாடு தலை வரித்தாடும் நிலையில் காந்திபுரம், கருணாநிதி நகர் பகுதி பெண்கள் நேற்று திடீர் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். சிறிய மற்றும் பெரிய அளவில் 500க்கும் மேற்பட்ட தெருக்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. 16200க்கு மேல் குடிநீர் இணைப்புகள் உள்ளன.

நகராட்சி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை மாற்றுவதற்காக ரூ.18.58 கோடி அரசு வழங்கியது. இத் திட்டத்தின்படி சம்பை ஊற்று, நாடார் குடியிருப்பு, பருப்பு ஊரணி ஆகிய பகுதிகளில் 6 புதிய போர், சூடாமணிபுரம், செஞ்சை, மகர் நோன்பு திடல், சொக்காலை ரோடு என 4 இடங்களில் மொத்தம் 20 லட்சம் லிட்டர் கொள்ளவு உள்ள புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளன. 67 கி. மீட்டருக்கு மேல் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அனைவரும் கட்டாயம் வீட்டு இணைப்பு பெற வேண்டும் என எழுதப்படாத சட்டத்தின்படி ஒரு சில வார்டுகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இருந்த பொதுகுழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தீர்க்கபடாமலேயே உள்ளது. இந்நிலையில் கருணாநிதி நகர், காந்திபுரம் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் வராததை கண்டித்து அப்பகுதி பெண்கள் நேற்று திடீரென நகராட்சி அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

ராஜம்மாள் (கருணாநிதி நகர்). இங்குள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 70க்கும் மேல் குடிநீர் இணைப்பு உள்ளது. பொதுபைப்பு இருந்ததை மூடிவிட்டனர். வீடுகளில் போர் இல்லாததால் நகராட்சி தண்ணீரைத்தான் நம்பி உள்ளோம். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் பிரச்னை உள்ளது. ஒவ்வொரு முறையும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கும்போது வந்து சரி செய்வார்கள். அதன்பிறகு மீண்டும் பிரச்னை வந்துவிடும். தற்போது 20 நாட்களாக முற்றிலும் தண்ணீர் வராதநிலை உள்ளது. அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் கண்டுகொள்ள வில்லை.

அஞ்சலிதேவி (காந்திபுரம்) காந்திபுரம் மேட்டுதெரு பகுதியில் கடந்த 3 மாதங் ளுக்கு முன்னாள் பாதாளசாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டினர். அப்போது இருந்து தண்ணீர் பிரச்னை உள்ளது. ஒரு பொது பைப்பில் மட்டும் தண்ணீர் வந்தது இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது அதிலும் தண்ணீர் வராத நிலை உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area , water scaricity ,Karaikudi , ladies protest, karaikudi muncipal
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...