×

துபாய், கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாய், கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகாத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொழும்பு விமானத்தில் வந்த சுற்றுலா பயணியாக  இலங்கையை சேர்ந்த இளங்கேஸ்வரன் (60) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் உடமைகளில் எதுவுமில்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது உள்ளாடைக்குள் 17 துண்டுகளாக மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர். அதாவது ரூ. 9 லட்சத்து  30 ஆயிரம் மதிப்புள்ள  283 கிராம் தங்கத்தை கைப்பற்றினார். மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த மகாலிங்கம்(61) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி உடமைகளை  சோதனை செய்தபோது 4 சேவிங் கருவிகளும் சிறிய ஸ்டாண்டுகளும் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கம்பிகளை  மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 12 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2  பேரிடம் இருந்து ரூ.  22 லட்சத்து 11 ஆயிரம்  மதிப்புள்ள   673  கிராம் எடைக்கொண்ட தங்கத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Colombo , Dubai, Colombo, Chennai, gold, confiscation
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...