×

ஒடிசாவில் பானி புயல் இன்று கரை கடக்கிறது 11 லட்சம் மக்கள் வெளியேற்றம்: 200 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும்

புவனேஷ்வர்: வங்கக் கடலில் உருவான அதிதீவிர பானி புயல், ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு .உள்ளனர். மீட்பு பணிக்காக கடற்படை, விமான படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரை கடக்கும்போது மணிக்கு 200 கிமீ வேகத்துக்கு மேல் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ளது.

இது ஒடிசா மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி, அங்குள்ள பூரிக்கு தென்மேற்கே 430 கிமீ., ஆந்திராவில் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 225 கிமீ. தூரத்தில் புயல் நிலை கொண்டிருந்தது. இது, இன்று பகலில் பூரி அருகே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 200 கிமீ.க்கு பலத்த காற்று வீசும். மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் உள்ள 11 முதல் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. எனவே, இப்பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக விமானப்படை, கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகள், பள்ளிகள் உட்பட 880 இடங்களில் புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக இம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகளை செய்து வருகிறார். பூரி, ஜெகத்சிங்பூர், கேன்ட்ரபாரா, பாலசோர், பாத்ராக், கன்ஜம், குர்தா, ஜாஜ்புர், நியாகர், கட்டாக், காஜபதி, மயூர்பஞ்ச், தென்கனால் உட்பட 14 மாவட்டங்களை புயல் தாக்கும் அபாயம் நிலவுகிறது. ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தின் ஒரு சில பகுதிகளிலும் பானி புயல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் பயங்கர கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டில் முதல்முறை

பானி புயலால் ஒடிசாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என கருதப்படுகிறது. இதனால், 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, புயல் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புயல் முன்னெச்சரிக்கையாக ஒரு மாநிலத்தில் 11 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு இருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறை. புயல் பீதியில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

223 ரயில்கள் ரத்து

ஒடிசாவுக்கு இன்று இயக்கப்பட இருந்த 223 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா-சென்னை, சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், டெல்லி- புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட அல்லது வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

பிரதமர் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரண உதவிகள் அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பல்வேறு துறைகளை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், வானிலைத்துறை அதிகாரிகள், பாதுகாப்பு துறைகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bani ,storm ,Odisha , Odisha, Bani storm, today shore, crossing, people, evacuation
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை