×

அட்சயதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடைகளில் நகை முன்பதிவு மும்முரம்

* வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகை அறிவிப்பு
* கடந்த ஆண்டை விட விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
* காலை 10 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்படும். அட்சயதிரிதியை அன்று காலை 6 மணி முதல் நகைக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: அட்சதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடைகளில் நகை முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களை கவரும் பல்வேறு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது.  ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும்  தரும் என்று நம்பப்படுகிறது.

அட்சய திருதியை அன்று குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு  வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. அதன்படி, இந்தாண்டு அட்சய திருதியை வருகிற 7ம் தேதி வருகிறது. இந்த நிலையில் அட்சயதிரிதியை முன்னிட்டு கடந்த 28ம் தேதி முதல் நகைக்கடைகளில் முன்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் சுமார் 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகள் முழுவதும் தற்போது முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு கடைகளிலும் அதிரடியாக சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளனர். அதாவது கடைக்கு ஏற்றார் சலுகைகளை வழங்கியுள்ளனர்.

கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி, செய்கூலி சேதாரத்தில் தள்ளுபடி, புக் செய்த அன்று என்ன விலையோ அதே விலையில் அட்சயதிரிதியை அன்று தங்கம் விற்கப்படும். அதே நேரத்தில் அட்சயதிரியை அன்று விலை உயர்ந்தால் புக் செய்த விலைக்கே விற்கப்படும் என்று பல்வேறு தள்ளுபடியை அதிரடியாக அறிவித்துள்ளனர்.

அட்சயதிரிதியைக்கு இன்னும் 3 நாட்கள் மட்மே எஞ்சியுள்ளதால் முன்பதிவு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அட்சயதிரிதியைக்காக நகைக் கடைகளில் புது, புது டிசைன்களில் தங்க  நகைகள் விற்பனைக்காக வந்துள்ளன. எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல்,  கம்மல், மோதிரம், டாலர் செயின் என சுமார் 4,000 வரையிலான டிசைன்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:
அட்சயதிரியை முன்னிட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அளவுக்கு முன்பதிவு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அட்சயதிரியை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் நகைகளை தேர்வு செய்து வாங்குவது என்பது கடினம்.

இப்போதே புக் செய்தால் அந்த நேரத்தில் ஆர்டர் செய்த நகையை உடனடியாக வாங்கி செல்ல முடியும். அதனால், தான் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக காலை 10 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்படும். அட்சயதிரிதியை அன்று காலை 6 மணி முதல் நகைக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்று இரவு முழுவதும் கடை திறந்திருக்கும். நள்ளிரவில் நகை வாங்குபவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல சிறப்பு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு அட்சயதிரியை அன்று சுமார் 6 கிலோ அளவுக்கு மேல் தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு கடந்த அட்சயதிரியை அன்று 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shops ,Tamilnadu , Achyadhari, Tamilnadu, shop, jewelry, reservation, Mumumuram
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி