×

மதுரையிலிருந்து சென்னைக்கு விமான சேவை குறைந்ததால் பயண கட்டணம் எகிறியது

அவனியாபுரம்: மதுரையிலிருந்து சென்னை செல்ல ஆம்னி  பஸ்கள் மற்றும் ரயில் சேவைகள் இருந்தாலும் நேரம் சேமிப்பு, விரைந்த பயணம் உள்ளிட்ட காரணங்களால் அவசர வேலைகளுக்குச் செல்லும் பயணிகள் விமானத்தை நாடுகின்றனர். இதனால் விமான சேவையும் அதிகரித்து ஆம்னி பஸ்களுக்கும், விமான கட்டணத்திற்கும் குறைந்த அளவே வித்தியாசம் இருந்தது.

தற்போது ஜெட் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாலும், கோடை விடுமுறையையொட்டி விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பாலும் விமானக் கட்டணம் எகிறி இருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு தினசரி 11 சேவைகள் இருந்தன. தற்போது இது 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1600லிருந்து ரூ.1800 வரை கட்டணம் இருந்தது. தற்பொழுது ரூ.2800 லிருந்து ரூ.5300 வரைக்கும் அதிகரித்துள்ளது.

விமான நிலையம் புதிதாக விரிவுபடுத்தப்பட்டு, 100 சதவீதம் பயணிகளின் எண்ணிக்கை வரும் நிலையில் விமான சேவைகளின் எண்ணிக்கை குறைப்பு பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணக் கட்டண உயர்வால் தொழில் மற்றும் பணி நிமித்தமாக பயணம் செய்வோர் மட்டுமே விமானத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தோடு பயணிப்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமானநிலைய ஊழியர்கள் கூறும்போது, ‘‘ஜெட் ஏர்வேஸ் சேவையை நிறுத்தினாலும் நாட்டின் மற்ற விமான நிலையங்களில் விமான சேவையில் எந்த மாற்றமின்றி, கட்டணம் உயர்த்தாமல் செயல்படுகின்றன. மதுரை - சென்னை விமான சேவையில் குறைந்த லாபமே கிடைப்பதால் பிற விமான நிறுவனங்கள் சேவையை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன’’ என்றனர். பயணிகள் கூறும்போது, ‘‘மதுரை விமானநிலையத்தில் 24 மணிநேர சேவையையும், அதிகளவில் விமான சேவைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் . இதை கருத்தில் கொண்டு சேவையை அதிகரித்து, கட்டணக் குறைப்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

மதுரை-டெல்லிக்கு ரூ.7,000 வசூல்

மதுரையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல பயணக் கட்டணமும் கடந்த காலங்களை விட தற்போது ரூ.1000 லிருந்து ரூ.3000 வரை அதிகரித்துள்ளது. இந்த கோடை விடுமுறை காலத்தில் இந்த உயர்வு விமான பயணத்திற்கு பெரும் பின்னடைவாகும். தற்போதைய பயணக் கட்டணம்: டில்லி ரூ. 7000, சென்னை ரூ.2800, ஹைதராபாத் ரூ.5500, பெங்களூரு ரூ.4800, ராஜமுந்திரி ரூ.7200

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flights ,Madurai ,Chennai , Madurai, Chennai, Air Service, Travel Fee,
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து