×

காங்கிரஸ் ஆட்சியில் 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக்: தேதி வாரியாக விளக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியின்போது 6 முறை, பாகிஸ்தான் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டுள்ளது என்றும், அதுபற்றிய தேதி வாரிய விவரத்தையும் காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. தொடர்ந்து, தாங்கள்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக கூறிவரும் பாஜ.வுக்கு பதிலடியாக இந்த தகவலை வெளியிட முடிவு செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியப் பகுதியில் தாக்குதல் நடத்தும்போது, தன்னுடைய அரசின் உத்தரவுப்படி ராணுவம் எல்லை தாண்டிச் சென்று சர்ஜிக்கல் நடத்தி அவர்களை ஒடுக்கி வருகிறது என்றும், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இந்த தைரியம் இருந்ததில்லை என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களில் பேசி வருகிறார். ஆனால், தங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்துள்ளது என்றும், ஆனால், ராணுவ வீரர்களை தேவையில்லாமல் அரசியலுக்கு இழுக்க விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர். இப்போது மசூத் அசார் விவகாரத்திலும், இந்தியா அதிரடி முடிவு எடுத்ததன் மூலம்தான் ஐ.நா. அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது என்று பாஜ கூறி வருகிறது. ஆனால், இந்திய சிறையில் இருந்த மசூத் அசாரை விடுவித்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜ அரசுதான் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், பாஜ.வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் மன்மோகன் சிங் அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய விவரங்களை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் சுக்லா வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: எங்கள் ஆட்சியின்போது 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் மேற்கொள்ளப்பட்டது. முதல் தாக்குதல், 2008ம் ஆண்டு ஜூன் 19, பூஞ்சின் பாதல் செக்டாரில் நடத்தப்பட்டது. 2வது தாக்குதல், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 1ல், நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரிலும், 2013ம் ஆண்டு ஜனவரி 6ல், சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியிலும், 2013 ஜூலை 27 மற்றும் ஜூலை 28ல், நசாபியர் செக்டாரிலும், ஐந்தாவதாக 2013 ஆகஸ்ட் 6ல் நீலம் பள்ளத்தாக்கிலும், ஆறாவதாக 2014 ஜனவரி 14ம் தேதியும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி புள்ளிவிவரங்களால், பாஜ தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sergeant Strike ,Congress , Congress rule, 6 Sergeant Strike, date wise
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...