×

காளிகாம்பாள் கோயில் நிர்வாக அறங்காவலர் தேர்தலை நவம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காளிகாம்பாள் கோயில் நிர்வாக அறங்காவலர் தேர்தலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி, நவம்பர் 30ம் தேதிக்குள் புதிய அறங்காவலர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை காளிகாம்பாள் கோயிலை நிர்வகித்து வரும் காளிகாம்பாள் காமதேஸ்வர தேவஸ்தானத்துக்கு 5 பேர் கொண்ட அறங்காவலர் குழுவை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 1935ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து வருகிறது.இதன்படி விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்ட 65 வயதுக்கு உட்பட்ட ஆண் பக்தர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்படி இறுதிவாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அதில், நேரடி வாக்குப்பதிவு மூலமாக 5 அறங்காவலர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர். இவர்களில் ஒருவர் நிர்வாக அறங்காவலராக தேர்வு செய்யப்படுவார்.

அந்த வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி தானாகவே காலாவதியாகிவிடும் என்பதால் அடுத்த வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 வரை பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அறங்காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட மூர்த்தி உள்ளிட்ட 5 அறங்காவலர்களின் பதவிக் காலத்தை 2 ஆண்டுகளாக குறைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால், அவர்களின் பதவிக்காலம் 2018 மே மாதத்துடன் முடிவடைந்தது. இதை எதிர்த்து மூர்த்தி உள்ளிட்ட 5 பேரும் தங்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக நீட்டிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மணி என்பவர் கோயில் அறங்காவலர்களுக்கான தேர்தலை நடத்தக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், அறங்காவலர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.மகாராஜா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தேர்தல் நடத்த முடியும்.

தற்போதுள்ள அறங்காவலர்களின் பதவிக்காலம் அறநிலையத்துறை உத்தரவுப்படி கடந்த 2018ம் ஆண்டு முடிவடைந்து விட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வாக்காளர்கள் பதிவு செய்வதற்கு அவகாசம் அளித்து புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து வரும் 2019 நவம்பர் 15ம் தேதிக்குள் அறங்காவலர் குழுவுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். நவம்பர் 30ம் தேதி புதிய அறங்காவலர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் தேவஸ்தான நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள அதிகாரியாக வழக்கறிஞர் எம்.பாஸ்கரை நியமிக்கிறேன். அவருடன் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஒருவரும் கூடுதல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும், கோயில் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதும் அவர்களிடம் இவர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Caligampa Temple Trustee ,High Court , Executive, Trustee, Khaliambal temple, High Court ,order
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...