×

2,000 ஆண்டு பழமையான மயில் சிலை அகற்றம்: திருச்செந்தூர் கோயில் அதிகாரி உள்பட 6 பேர் மீது வழக்கு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில் சிலையை ரகசியமாக அகற்றியதாக முன்னாள் இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சிலைக்கு முன்பாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில் கற்சிலை இருந்தது. முருகனின் வாகனமான அதையும் பக்தர்கள் வழிபடுவர். இந்த சிலை பலகோடி மதிப்பு கொண்டது. கடந்த 6.8.2017ல் மயில் சிலை சேதமாகி உள்ளதாக கூறி அதை அங்கிருந்து அகற்றினர். இது பக்தர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டினருக்கு விற்கத்தான் அதை அகற்றி உள்ளனர் என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அகற்றப்பட்ட சிலை 13 நாள் கழித்து 19.8.2017 அன்று அதே இடத்தில் வைக்கப்பட்டது. சிலை சேதமாகியிருந்தால் அதை மாற்ற அப்போதைய இணை ஆணையராக இருந்த பரஞ்ஜோதி, இந்து அறநிலையத்துறை ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை என தெரிகிறது.

சிலையை அகற்றியதில் உள்நோக்கம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் நீலகிரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தென்னரசன் ஆகியோர் கொண்ட குழு திருச்செந்தூர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிலை அகற்றப்பட்டு மீண்டும் வைக்கப்பட்டதையும், இதற்கு மேலிடத்தில் அனுமதி பெறவில்லை என்பதையும் உறுதி செய்தனர். இதுகுறித்து திருக்கோயில் போலீசில் அவர்கள் புகார் செய்தனர். அதனடிப்படையில் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, உள்துறை அலுவலர் பத்மநாபன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruchendur ,temple officer ,persons , The oldest peacock statue, the Thiruchendur temple officer, is the case
× RELATED கோழிக்கோடு விமான விபத்துக்கு...