×

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: மே 13ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மே 13ம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 1996-97 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ஜெஜெடிவிக்கு எலெக்ட்ரானிக் கருவிகள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொடநாடு டீ எஸ்டெட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பண பறிமாற்றம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
 
இதையடுத்து அமலாக்கத்துறையினர் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது 4 அந்நிய செலவாணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.

இதையடுத்து, காணொலிக் காட்சிகள் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட சசிகலாவிடம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் சசிகலாவை மே 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அப்போது சாட்சிகள் தெரிவித்த விபரங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Egmore , Foreign exchange, Sasikala, appear, Egmore court, Bengaluru jail
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!