×

இலவசங்களுக்காக ஒதுக்கும் நிதியில் அணை கட்டலாமே!...... அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: இலவசங்களுக்கு நிதி ஒதுக்குவதை தவிர்த்து அந்த பணத்தில் அணைகளை கட்டலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால்,  எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு மற்றும் அடையாறு ஆகியவற்றை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதற்கான செலவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்ததுடன் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

நீதிபதிகள் அறிவுரை

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்குள் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை கண்டறிந்து அதன்மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும்.  

இந்த பணிகளை 3 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் பாட்டில்களில் தான் நீரை பார்க்கும் சூழல் ஏற்படும். இலவசங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு பதில் வீணாகும் நீரை தடுக்க அணைகளை கட்டலாம். இயற்கையின் வரப்பிரசாதமான நீரை வீணாக்கினால் தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை போல் தமிழகம் மாறும் நிலை உருவாகும் என  நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam , Chennai High Court, Tamil Nadu Government, Rain, Water Resources,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்