×

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: திருச்சி, காரைக்கால், கும்பகோணம் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி விசாரணை

திருச்சி: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி, காரைக்கால், கும்பகோணம் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். மதமாற்றம் செய்ய வந்தவர்கள் எனக்கூறி சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தமிழக போலீசார் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பினர், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு கடந்த மாதம் 25ம் தேதி மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ராமலிங்கம் கொலை வழக்கை சவுகத் அலி தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை 8 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திருச்சி வந்தனர். அவர்கள் பாலக்கரை பிரபாத் தியேட்டர் ரவுண்டானா அருகே அமைந்துள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையை தொடர்ந்து பாலக்கரை பகுதி முழுவதும் சாலையோரங்களில் ஏராளமான போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், புதுச்சேரி காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் குத்தூஸ் என்பவரின் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் உள்ள பழைய மீன் அங்காடி அருகே உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்திலும், கே.எம்.எஸ் நகரில் உள்ள அப்துல் மஜீத் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,Niranam Ramalingam ,NIA officers ,Karaikal ,Kumbakonam ,Trichy , Tribanam Ramalingam, murder, Trichy, Karaikal, Kumbakonam, NIA, Investigation
× RELATED வால்பாறையில் ரூ.2.9 கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட் வேலி’ அமைக்கும் பணி தீவிரம்