×

திருச்செந்தூர் முருகன் கோவில் மயில் சிலை சேதம்: அறநிலையத்துறை அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் கருவறைக்கு எதிரே இருந்த பழங்கால மயில் சிலை திருடப்பட்டு, போலி சிலை நிறுவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவில் கருவறை எதிரே பழங்கால மயில் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2017ம் ஆண்டு இந்த சிலையை கோவில் பணியாளர்களே பெயர்த்தெடுத்து அதற்கு பதிலாக போலி சிலை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பான தகவல் பரவியதால் அச்சமடைந்த பணியாளர்கள், மீண்டும் பழங்கால சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர். அப்போது சிலையில் தலை பகுதி சேதமடைந்துள்ளது.

ஆனால், சிலை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து, போலீசில் புகார் அளிக்காமல் அதனை மறைக்க சிலர் முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது சிசிடிவி இணைப்புகளை துண்டித்துவிட்டு சிலை மாற்றப்பட்டது தெரியவந்ததை அடுத்து இந்த சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மநாதன், திருமேணி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜகுமார், சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchendur Murugan , Tiruchendur Murugan Temple, Peacock sculpture, the Endowment, Statue trafficking
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...