×

ரெய்னா, டோனி அதிரடி ஆட்டம் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது சிஎஸ்கே

சென்னை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் ரபாடா, இஷாந்த்துக்கு ஓய்வளிக்கப்பட்டு டிரென்ட் போல்ட், சுசித் இடம் பெற்றனர். சென்னை அணியில் சான்ட்னர், விஜய், ஷோரிக்கு பதிலாக டோனி, டு பிளெஸ்ஸி, ஜடேஜா இடம் பெற்றனர். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக டு பிளெஸ்ஸி, வாட்சன் களமிறங்கினர். இருவரும் போல்ட், சுசித் பந்துவீச்சை சமாளித்து ரன் எடுக்கத் திணறினர். சென்னை அணி முதல் 3 ஓவரில் 3 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. 9 பந்துகளை சந்தித்த வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் சுசித் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் வசம் பிடிபட்டு ஏமாற்றமளித்தார்.அடுத்து டு பிளெஸ்ஸியுடன் ரெய்னா இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தனர். டு பிளெஸ்ஸி 39 ரன் (41 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார். அரை சதத்தை நிறைவு செய்த ரெய்னா, 59 ரன் (37 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சுசித் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த நிலையில், டோனி - ஜடேஜா அதிரடியில் இறன்கி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். ஜடேஜா 10 பந்தில் 25 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விடைபெற்றார். கடைசி கட்டத்தில் டோனி பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட்டு சிஎஸ்கே ரசிகர்களை பரவசப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் அந்த அணிக்கு 77 ரன் கிடைத்தது. டோனி 44 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ராயுடு 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. அந்த அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 99 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. எஸ்.எஸ். ஐயர் அதிகபட்சமாக 44 ரன் (31பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். தவான் 19 ரன் எடுத்தனர். சென்னை அணி பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 4, ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Raina ,Tony Action Club ,spot ,CSK , Raina, Tony Action , CKK , number one
× RELATED ஹாட் ஸ்பாட் 2வது பாகம் உருவாகும்: இயக்குனர் தகவல்