×

ஆவடி, அம்பத்தூர் பகுதி சிடிஎச் சாலையில் விதிகளை மீறும் கன்டெய்னர் லாரிகளால் விபத்து அபாயம் : நிரந்தர தடை விதிக்க கோரிக்கை

ஆவடி: சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக செல்லும் சிடிஎச் சாலையை ஆவடி பகுதியில் உள்ள ராணுவ துறை நிறுவனங்கள், மத்திய போலீஸ் பாதுகாப்புப்படை, இந்திய விமானப்படை,  தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவு கிடங்கு ஆகியவற்றில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இச்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.  இந்நிலையில் சிடிஎச் சாலையில் கடந்த சில ஆண்டாக கன்டெய்னர் லாரிகள், கனரக சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேற்கண்ட வாகனங்கள் தாம்பரம்-புழல் புறவழிச்சாலை வழியாக சென்று வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி மற்ற வாகனங்கள் எளிதாக சென்று வந்தன. ஆனால் சமீப காலமாக கன்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள் இரவு பகல் பாராமல் அதிகமாக வந்து செல்கின்றன. இதனால் பகல் நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் மற்ற வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆவடி, அம்பத்தூர் பகுதியில் சமீப காலமாக கன்டெய்னர் லாரிகள்  அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் சாலையில் பாதசாரிகளும், சைக்கிளில் வரும் மாணவர்களும் செல்ல முடியவில்லை. சிடிஎச் சாலை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும், சேதமடைந்தும் இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் எளிதில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே  இச்சாலையில் பாடி முதல் திருநின்றவூர் வரை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு சாலை  குறுகலாகவே உள்ளது. இச்சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களில் முன்பு வாகனங்களும் ஆக்கிரமித்து உள்ளது. இச்சாலையில், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது” என்றனர்.

போக்குவரத்து போலீசார் மெத்தனம்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை மடக்கி பிடித்து லைசன்ஸ் உள்ளதா? மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என்று கேட்கும் போக்குவரத்து போலீசார், எளிதில் விபத்து ஏற்படுத்துக்கும் கன்டெய்னர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது புரியாத புதிர்தான். இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஆவடி, அம்பத்தூர் சிடிஎச் சாலையில் கன்டெய்னர் லாரிகள், கனரக சரக்கு வாகனங்கள் செல்ல நிரந்தரதடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CB Road ,Avadi , Atadi, Ambattur, CT road, Accidental risk,violating rules,restriction
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!