×

மோடி பேரணிக்கு தடை விதிக்கணும்: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அபிஷேக் மானு சிங்வி உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று சென்று பிரதமர்ம மோடிக்கு எதிராக புகார் மனு அளித்தனர். பின்னர், சிங்வி அளித்த பேட்டி:தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தரப்பில் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் பிரதமர் மோடி எங்கெங்கு பிரசாரத்துக்காக செல்ல இருக்கிறாரோ, அப்பகுதியின் கலாச்சாரம் குறித்த விவரங்களை ஒரு நாளில் அளிக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதும்படி நிதி ஆயோக் அமைப்பை பிரதமர் அலுவலகம் தவறான முறையில் பயன்படுத்தி உள்ளது. பிரதமரும் மற்ற வேட்பாளர்களை போன்றவர்தான். அரசு அமைப்புகளை தேர்தல் பிரசாரத்துக்கு அவர் பயன்படுத்த முடியாது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. எனவே, இதை  உடனடியாக தடுத்து நிறுத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

 மக்களவை 5ம் கட்ட தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. அப்போது, மத்திய பிரதேசத்தில் உள்ள தாமோ மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம், இந்த தொகுதிக்கு அருகில் உள்ள சாகர் மாவட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பண்டா, ரேஹ்லி, தியோரி சட்டப்பேரவை தொகுதிகள், தாமோ மக்களவை தொகுதிக்கு உட்பட்டவை. இதனால், சாகர் மாவட்டத்தில் மோடி பேரணி நடத்தினால், தாமோ மக்களவை தொகுதி மக்களிடையே அது  பாஜ.வுக்கு ஆதரவாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், இந்த பேரணியை அனுமதிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,rally ,Congress ,EC , Modi , ban, Modi,Congress
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...