×

பாஜ ஆட்சியில் இல்லாமல் போகும் நாள் வந்தாலும் கூட...: அமித் ஷா திடீர் அறிவிப்பு

மக்களவைக்கு 4 கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் 3 கட்டங்கள் மட்டுமே பாக்கி. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிவு தங்களுக்குதான் சாதகமாக இருப்பதாக ஆளும் பாஜ.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் சொல்லி கொண்டிருக்கின்றன. இதனால், அடுத்த 3 கட்டத் தேர்தல்களில் அதிக இடங்களை பிடிப்பதற்கான முயற்சியில், தீவிர பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பாஜ தலைவர் அமித் ஷா நேற்று தீவிர பிரசாரம் செய்தார். பாங்கன் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:.மத்தியில் இப்போது பாஜ ஆட்சியில் உள்ளது. பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். வரும் நாட்களிலும் அவரே பிரதமராக தொடர்வார். ஒருவேளை, பாஜ ஆட்சியில் இல்லாமல் போகும் நாள் வந்்தாலும் கூட, பாஜ தொண்டர்கள் இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து போராடுவார்கள்.

இந்தியாவை பிரிக்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி செயல்படுகிறார். நாட்டுக்கு 2 பிரதமர்கள் தேவை என கூறிய ஒமர் அப்துல்லாவின் கருத்துக்கு அவர் துணை போகிறாரா என்பதை அறிய விரும்புகிறோம். நாட்டின் வளத்தை அரிக்கும் கரையான்களாக ஊடுருவல்காரர்கள் இருப்பதால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களை நாட்டை விட்டே விரட்டுவோம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி, ஊடுருவல்காரர்களுக்கு சொர்க்கபுரியாக விளங்குகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் வெடிகுண்டு தொழிற்சாலைகளை தவிர வேறு எந்த தொழிற்சாலைகளும் உருவாக்கப்படவில்லை. காஷ்மீரின் புல்வாமாவில் நடத்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் விமான மூலம் தாக்குதல் நடத்தினோம். இதை நாடே உற்சாகமாக கொண்டாடியது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுலும், திரிணாமுல் தலைவர் மம்தாவும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை விட வாக்கு வங்கியை பாதுகாப்பதில்தான் அவர்கள் இருவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,announcement ,Amit Shah , BJP rule,day comes,Amit Shah, Sudden, Announcement
× RELATED அமித்ஷா, நட்டா கூட்டணி தலைவர்களுக்கு...