×

வெளியே எங்கும் செல்ல வேண்டாம் இலங்கை தலைவர்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை: தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த சதி

கொழும்பு: இலங்கையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, அரசியல் தலைவர்கள் கூட்டாக வெளியில் செல்ல வேண்டாம் என்று இலங்கை உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயம்  அடைந்தனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபடலாம் என்று இலங்கை உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இலங்கை உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்புகளை போல, மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட தீவிரவாதிகள்  திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இவர்களின் சதித்திட்டங்களை முறியடிக்கும் வகையில். இலங்கை முழுவதும் பாதுகாப்புகள், கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அரசியல் தலைவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புகள் உள்ளன. எனவே, இலங்கை அதிபர்,  பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். ஒருவேளை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய கட்டாய சூழ்நிலை  இருந்தால், ஹெலிகாப்டரில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்’ என்றனர்.  அதேவேளையில், அந்நாட்டின் மேற்கத்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் படாலி சம்பிகா ரணவாகா, இலங்கை மதரசாக்களில் மதபோதனை வகுப்புகளை நடத்தும் வெளிநாட்டு இஸ்லாமியர்கள் 800 பேரை உடனடியாக நாடு கடத்துமாறு  உத்தரவிட்டுள்ளார்.

களையிழந்த மே தினம்
தீவிரவாதிகள் மீண்டும்  தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால், இலங்கையில் வழக்கமான மே தின கொண்டாட்டங்கள், பேரணிகள் நேற்று நடைபெறவில்லை. மாறாக, தொழிற்சங்க உறுப்பினர்கள், தொழிலாளர்களை தனிப்பட்ட முறையில்  சந்தித்து மே தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி சார்பில் நடத்துவதாக இருந்த மே தின கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

2 இந்தியர்கள் கைது
இலங்கையில் முறையான விசா இல்லாமல் ராஜகிரிய பகுதியில் தங்கியிருந்த 2 இந்தியர்களை வெலிகட போலீசார் நேற்று கைது செய்தனர். 28, 32 வயதுடைய இவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. கைதான இருவரும், அலுத்கடே  மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த வாரம், விசா இன்றி தங்கியிருந்த ஒரு இந்தியர் உட்பட 13 வெளிநாட்டவரை இலங்கை போலீசார் கைது செய்திருந்தனர்.

ஜாகீர் நாயக் டிவி.க்கு தடை
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின், ‘பீஸ் டிவி’யின் ஒளிபரப்பை இலங்கையில் உள்ள 2 கேபிள் டிவி நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இந்த டிவி.க்கு இந்தியாவும்,  வங்கதேசமும் ஏற்கனவே தடை விதித்துள்ளன.

விசாரணை அறிக்கை 6ம் தேதி சமர்ப்பிப்பு
கடந்த மாதம் 21ம் தேதி நடந்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் கே மலால்கோடா தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிறப்பு குழுவை இலங்கை அதிபர்  சிறிசேனா அமைத்திருந்தார். இந்த குழுவினர், பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள்  அறிக்கையை வரும் 6ம் தேதி சமர்ப்பிக்க உள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Intelligence Department ,leaders ,anywhere ,Sri Lankan ,re-attack ,terrorists , Sri Lankan ,leaders,, warns ,terrorists,attack again
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி...