×

மாவட்ட நீதிபதி பதவிக்கு தேர்வு எழுதிய நீதிபதிகள் உள்பட அம்புட்டு பேரும் பெயில்

சென்னை: மாவட்ட நீதிபதிக்கான தகுதி தேர்வு எழுதிய மாஜிஸ்திரேட்கள், சிவில் நீதிபதிகள் உட்பட தேர்வு எழுதிய அனைவரும் பெயில் ஆகிய சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், இடஒதுக்கீடு அடிப்படையில், தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த பிப்ரவரி 2ம் தேதி வரை வழக்கறிஞர்கள், ஏற்கனவே நீதிமன்றங்களில் சிவில் நீதிபதியாகவும், மாஜிஸ்திரேட்களாகவும் பணியாற்றி வரும் பலரும் மாவட்ட நீதிபதிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இதில் சரியாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னர், 3562 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் 300க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே சிவில் நீதிபதியாகவும், மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றி வரும் நீதிபதிகள் என்று கூறப்படுகிறது. இதற்கான தேர்வு கடந்த 7ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.

இதில் விண்ணப்பத்திருந்த 3562 பேரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு 150-150 மதிப்பெண் என முதல் தாள், இரண்டாம் தாள் காலை, மாலை என நடந்தது. நெகட்டிவ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு நடந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய வக்கீல்களும், நீதிபதிகளும் முடிவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தேர்வு முடிவோ அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்வு முடிவுகள், தேர்வு எழுதியவர்களைவிட நீதிமன்ற வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் தேர்வு எழுதிய ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நெகட்டிவ் மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக தேர்வுக்கு விண்ணப்பித்த பெரும்பாலான மாஜிஸ்திரேட்கள், கீழமை நீதிமன்ற சார்பு நீதிபதிகள், தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாக விடுப்பு எடுத்துக்கொண்டு படிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பல வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு எழுதிய வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் முதல்நிலை தேர்விலேயே தோல்வியடைந்தது, வினாத்தாள் கடினமாக இருந்ததா எனவும் கேள்வியை எழுப்புகிறது. மேலும் தற்போது தேர்வு எழுதி தோல்வியடைந்த நீதிபதிகள் சிலரின் பெயர், தற்போது மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ள பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தகுதி தேர்வில் தோல்வியடைந்தவர்கள், பதவி உயர்வு மூலம் மாவட்ட நீதிபதியாவது சரியாகுமா என்றும் நீதித்துறை வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்களிடையே பெரும் விவாதமாக எழுந்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின் தேர்வு வரும் 25, 26 தேதிகளில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

* மாவட்ட நீதிபதிக்கான தகுதி தேர்வு எழுதிய மாஜிஸ்திரேட்கள், சிவில் நீதிபதிகள் உட்பட தேர்வு எழுதிய அனைவரும் பெயில் ஆகிய சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தேர்வு எழுதியதில் 95 சதவீதத்திற்கு மேற்பட்டோர் நெகட்டிவ் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

* தேர்வுக்கு விண்ணப்பித்த பெரும்பாலான மாஜிஸ்திரேட்கள், கீழமை நீதிமன்ற சார்பு நீதிபதிகள், தேர்வுக்கு தயார் செய்வதற்காக ஒரு மாதம் லீவ் போட்டு படித்தார்கள்.

* முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின் தேர்வு வரும் 25, 26 தேதிகளில் நடைபெற இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : District Judge ,arbitrator ,judges , District Judge Designation, Examination, Judges, Arrow, Bail
× RELATED மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் விழா