×

தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பெரிய அளவில் மாற்றம்? முதல்வரின் தீவிர ஆதரவாளர்கள் ரகசிய திட்டம்

சென்னை: தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான ரகசிய வேலைகளில் முதல்வரின் தீவிர ஆதரவாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016 டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். சசிகலாவை எதிர்த்ததால் அவரது பதவி பறிபோனது. பின்னர் 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். அவரது ஆட்சியை கவிழ்க்க டிடிவி.தினகரன் முயற்சி செய்து வருகிறார். ஆனால், எடப்பாடி அரசுக்கு மத்திய பாஜ அரசும், பிரதமர் மோடியும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான் கடந்த 2017 செப்டம்பர் மாதம் 18 அதிமுக எம்எல்ஏக்கள், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். அந்த 18 எம்எல்ஏக்களும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு கொறடா கொடுத்த புகாரை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் 18 எம்எல்ஏக்கள் பதவியையும் பறித்தார். தற்போது, அந்த 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் அதிமுகவுக்கு 114 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இதிலும் 3 எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய 3 எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரியாத நிலை உள்ளது. ஒருவர் சபாநாயகராக உள்ளார்.

அப்படியென்றால் 107 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தற்போது அதிமுகவுக்கு நிரந்தரமாக உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இச்சூழ்நிலையில்தான் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் 9 அல்லது 10 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த தொகுதிகளில் ஆளும்கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மட்டுமின்றி, நடந்து முடிந்துள்ள 38 மக்களவை தொகுதியிலும் அதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் டிடிவி.தினகரன் கட்சியின் அமமுகவினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் ஆசை நிறைவேறுமா என்பது வருகிற 23ம் தேதிதான் தெரியவரும். எப்படியும் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்சிகளுக்குமே சாதகமாக இருக்காது என்றே கூறப்படுகிறது. அதிமுகவுக்கு மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டால், கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பும். கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தற்போதுள்ள தலைமைக்கு எதிராக  குரல் கொடுப்பார்கள்.

இதனால், பெரிய அளவில் அதிமுகவில் உள்கட்சி மோதல் வெடிக்கும் அபாயமும் உள்ளது. அதேபோன்று, டிடிவி.தினகரன் கட்சி வேட்பாளர்கள் அதிமுகவைவிட அதிக வாக்குகள் பெற்றால், தாய் கட்சியான அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்வார்கள். இதுபோன்ற நிலை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான மூத்த அமைச்சர்கள் இப்போதே ரகசிய கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்படி, எக்காரணம் கொண்டும் அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அதே நேரம் கட்சி தலைமையை எடப்பாடி கைப்பற்றும் அளவுக்கு பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரவும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பெரிய அளவில் எதிர்ப்பு காட்ட மாட்டார் என்றே கூறப்படுகிறது. காரணம், இப்போதே ஓ.பன்னீர்செல்வம் கட்சி பணிகளில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு, மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கே அதிகளவில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அதனால் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. அதேபோன்று, டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் எப்படியும் அதிமுகவை கைப்பற்றி, மீண்டும் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிப்பதில் உறுதியாக உள்ளனர். இவர்கள் இரண்டு பேரின் ஆசைகளும் நிறைவேறுமா அல்லது கனவாக முடியுமா என்பது இன்னும் மூன்று வாரங்களில் தெரிந்துவிடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Chief Prosecutors , Tamil Nadu, election results, AIADMK, big, change? Principal, supporters, secret project
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...