×

அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய பஸ்களின் ஸ்டெப்னி டயர்கள் பழைய பஸ்களுக்கு மாற்றம்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு

வேலூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில், 8 கோட்டம், 21 மண்டலங்கள் உள்ளன. இவற்றில், 330 டிப்போவில், 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன், அலுவலர்கள் என, 1.45 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகம், கடந்த சில ஆண்டுகளாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஆயுட்காலம் முடிந்தும் 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள், ஜன்னல், படிக்கட்டு உடைந்தும், மழை காலங்களில் பஸ்சுக்குள் மழை நீர் வடிவதால் பயணிகள் குடை பிடித்தபடியும், நனைந்தபடியும் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அதில், தனியார் ஆம்னி பஸ்கள் போல் தமிழக அரசும் குளிர்சாதன மற்றும் சிலீப்பர் கோச் பஸ்கள் இயக்கி வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வாங்கப்பட்ட புதிய பஸ்களில் இருந்த ஸ்டெப்னி டயர்கள் கழற்றப்பட்டு, பழைய பஸ்களுக்கு அவற்றை பொருத்தி இயக்கப்படுகிறது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு போக்குவரத்து கழகம், நிர்வாக குளறுபடியால், நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை போக்குவரத்து கழகத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களை வாங்க எடுத்துக் கொண்டனர். இதனால் ஓய்வூதியதாரர்கள் பென்சன் கிடைக்காமல் தடுமாறி வருகின்றனர். இந்தாண்டு வாங்கப்பட்ட புதிய பஸ்களில் இருந்த ஸ்டெப்னி டயர்களை கழற்றி, பழைய பஸ்களுக்கு மாற்றி இயக்கப்படுகிறது.

புதிய பஸ்களில் இருந்து 90 சதவீத ஸ்டெப்னி டயர்கள் கழற்றப்பட்டுள்ளது. 10 சதவீத பஸ்களில் மட்டுமே ஸ்டெப்னி டயர்கள் உள்ளன. தொலைதூரம் பயணம் செய்யும் அரசு பஸ்கள் சாலையில் திடீரென டயர் பஞ்சராகி நின்று விட்டால் ஸ்டெப்னி இல்லாமல், டிப்போவில் இருந்து மாற்று டயர் வரும் வரை டிரைவர், கண்டக்டர்களும் பயணிகளும் நடுவழிலேயே காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

புதிய வண்டிகளில் ஸ்டெப்னி கட்டாயம்:
புதிதாக வாங்கப்படும் ஆட்டோ, கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அனைத்திலும் ஸ்டெப்னி டயர்கள் கட்டாயம் இருக்கும். அதேபோல், ஆர்டிஓ அலுவலகங்களில் வாகனத்தை பதிவு செய்யும்போது ஸ்டெப்னி டயர்கள் இருக்கும். வாகனத்தை பதிவு செய்தபிறகு டெப்போவுக்கு கொண்டு சென்றபிறகு ஸ்டெப்னி டயர்களை கழற்றி வேறு பஸ்களுக்கு மாற்றம் செய்வதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Steffani , Government Transport Corporation, New Bus, Steffani Tires, Old Bus, Transfer, Charging
× RELATED பிரதமர் மோடி பேசுவதை அவரது நாக்கே...