×

தமிழகத்துக்கு டாட்டா காட்டிய பானி புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்கிறது

சென்னை: பானி புயல் ஒடிசாவில் நாளை கரையை கடக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பானி புயல் தமிழகத்தை கடந்து செல்லும் நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் 420 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது.

இது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே மே 3ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம், ஏற்காட்டில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.

இந்நிலையில், நேற்று மாலை 3 மணிக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு வருமாறு:
தமிழகத்தை பொறுத்தவரை இன்று ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதோடு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பானி புயல் கரையை கடப்பது முதல் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். சென்னை, சுற்றுவட்டார பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 102.2 டிகிரி வெப்ப நிலையும், குறைந்தபட்சமாக 82.4 டிகிரி வெப்பநிலையும் பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, பானி புயல் உள்ளதால் தென்மேற்கு வங்கக்கடலில் மே 3ம் தேதி (நாளை) வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மே 3ம் தேதிக்கு பின்னர், மீன்பிடிக்க செல்லலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Bani ,Tamilnadu ,tata ,Orissa ,border , Tamil Nadu, Tata, Bani Storm, Tomorrow, Orissa
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...