×

மகாராஷ்டிராவில் புல்வாமா பாணி வெடிகுண்டு தாக்குதல் 15 கமாண்டோ வீரர்கள் பலி: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

மும்பை, மே 2: மகாராஷ்டிராவில் புல்வாமா தாக்குதல் பாணியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கமாண்டோ படையை சேர்ந்த 15 போலீசார் கொல்லப்பட்டனர். 10 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மாவோயிஸ்டுகளின் இந்த வெறிச்செயலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் விரைவு அதிரடிப்படையை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த மாவட்டத்தில் உள்ள தாதாபூர் சாலையில் குர்கேதா என்ற இடத்தில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது, சாலை அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், லாரிகள் போன்றவற்றை சாலையில் நிறுத்தி வைத்து இருந்தது. நேற்று அதிகாலை அங்கு வந்த மாவோயிஸ்ட்டுகள் கும்பல், 25க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தது. அவை அனைத்தும் எரிந்து கருகின. அவற்றை அணைக்க முயன்ற தொழிலாளர்கள், மாவோயிஸ்டுகளை பார்த்ததும் ஓடி தப்பினர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், கட்சிரோலி  மாவட்டத்தை சேர்ந்த விரைவு அதிரடிப்படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் வாகனங்களில் விரைந்தனர். தீ வைப்பு சம்பவம் நடந்ததும் அதிரடிப்படை வீரர்கள் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து இருந்த மாவோயிஸ்ட்டுகள், அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். வீரர்கள் வரக்கூடிய ஜம்போர்கேதா - லெந்தாரி இடையிலான சாலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை புதைத்து வைத்தனர். அவர்கள் திட்டமிட்டப்படியே, அந்த சாலையில் கமாண்டோ வீரர்களின் வாகனம் வந்தபோது தூரத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், வீரர்கள் வந்த வாகனம் வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் வாகனத்தின் டிரைவர் மற்றும் 15 கமாண்டோ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும், 10 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்தாண்டில் இந்த மாவட்டத்தில் 44 மாவோயிஸ்டுகளை அதிரடிப்படை வீரர்கள் தாக்குதல் நடத்தி கொன்றனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இத்தாக்குதலை மாவோயிஸ்டுகள் இப்போது நடத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ‘மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவம் பற்றி அவர் விளக்கினார். அப்போது, மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். இத்தாக்குதல் செய்தியை கேள்விப்பட்டதும் ராஜ்பவனில் நடக்க இருந்த மகாராஷ்டிரா தின நிகழ்ச்சிகளை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ரத்து செய்தார். மகாராஷ்டிரா தினத்தில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் மாநில அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி மாநில டிஜிபி சுபோத் குமார் ஜெய்ஸ்வால், ‘மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது. போலீசாருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்,’’ என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமான செயல். இது, தொடர்பாக மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 41 வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது, அதே பாணியில் மகாராஷ்டிராவில் இந்த தாக்குதலை மாவோயிஸ்ட்டுகள் நடத்தியுள்ளனர். இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் கண்டனம்:
பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், கட்சிரோலியில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய  தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. இது போன்ற வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மன்னிக்கப்பட மாட்டார்கள்’ என கூறியுள்ளார்.

பாடம் கற்கவில்லை:
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், கட்சிரோலியில் போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகக் கூடாது. மீண்டும் ஒருமுறை நமது வீரர்களின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், புல்வாமா தாக்குதலில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என தெளிவாகிறது’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commando soldiers ,bombing ,Pulwama ,Maoists ,Maharashtra , Maharashtra, Pulwama style, attack, 15 commando soldiers, murders, Maoists, hysteria
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை