×

கருவேலமரங்களுக்கு இடையில் ஓடி ஒளியும் திருடர்கள்: டக்கரம்மாள்புரம் சுற்றுவட்டாரங்களில் அதிகரிக்கும் திருட்டு: போலீசார் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

நெல்லை: நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றன. குறிப்பாக டக்கரம்மாள்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் பெருகி வரும் வீடுகளும், வீட்டு மனைகளும் நெல்லை மாநகராட்சி மற்றும் ரெட்டி
யார் பஞ்சாயத்தின் கீழ் செயல்பட்டுவருகின்றன. வீட்டு மனைகள் தொடர்ச்சியாக காணப்படும் இடங்களில் ஒருசிலர் மட்டுமே வீடு கட்டி வசிக்கின்றனர். இதை சாதகமாகபயன்படுத்தி கொண்டு ஒரு கொள்ளை கும்பல் அப்பகுதியில் ஊடுருவியுள்ளது.

குறிப்பாக டக்கரம்மாள்புரம், ஜோதிபுரம், கிறிஸ்துநகர், கொங்கந்தான்பாறை, ரெட்டியார்பட்டி, மகிழ்ச்சி நகர் பகுதிகளில் மட்டுமே கடந்த 2 மாதங்களில் 50 திருட்டுக்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆட்கள் இல்லாத வீடுகளில் பகல் நேரத்தில் நோட்டமிடும் திருடர்கள் இரவில் கூட்டாக வந்து கச்சிதமாக காரியத்தை முடித்துவிட்டு செல்கின்றனர். கொங்கந்தான்பாறை மற்றும் கிறிஸ்துநகர் பகுதிகளில் திருடர்கள் இரவு நேரங்களில் வீட்டு கதவை உடைப்பதும், ஜன்னலை உடைப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. ஆட்கள் வெளியூரில் இருப்பதால் உள்ளே சென்று தங்கள் கையில் கிடைக்கும் நகைகள் மற்றும் பணம், பொருட்களை அள்ளி செல்கின்றனர். டக்கரம்மாள்புரம் பைபாஸ் சாலையை ஒட்டிய பகுதிகளில் புதிய நிறுவனங்கள் நாளுக்கு நாள் வருகின்றன. இங்கு நடக்கும் கட்டுமான பணிகளுக்கு வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் சில சமயங்களில் ஊருக்கு செல்லும்போது திருட்டை நடத்துவதாகவும் போலீசாருக்கு புகார்கள் சென்றன.

நெல்லை அருகே பிரதான பகுதியான ரெட்டியார்பட்டியில் கடந்த வாரம் இரவில் தூங்கி கொண்டிருந்த இளைஞரிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல் டக்கரம்மாள்புரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை மேற்கொள்ளும் திருடர்கள் உடனடியாக காலி பிளாட்டுகளில் முளைத்திருக்கும் சீமை கருவேல மரங்களுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இதனால் பொதுமக்களால் திருடர்களை கண்காணிக்கவும், பிடிக்கவும் முடிவதில்லை.
ஜோதிபுரம், கிறிஸ்துநகர் பகுதிகளில் ஊரில் உள்ள இளைஞர்களே இணைந்து திருடர்களை பிடிக்க நள்ளிரவு நேரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக திருட்டு சம்பவங்கள் சனிக்கிழமைகளில் நடப்பதால் அன்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டக்கரம்மாள்புரம் சுற்றுவட்டாரங்களில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் செய்வதறியாது விழிக்கின்றனர். பெருமாள்புரம் போலீசார் நள்ளிரவு நேரத்தில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு புதர்போல் மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thieves ,theft , Thousands of robbers, thieves, takarammalapuram, stealing
× RELATED சென்னையில் செல்போன் திருடர்கள் இருவர் கைது!!