×

விருத்தாசலம் பகுதிகளில் ஆளில்லாத இடத்தில் பயணியர் நிழற்குடை: மக்கள் வரிப்பணம் பல லட்சம் வீண்

விருத்தாசலம்: விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம் பகுதிகளில் ஆளில்லாத இடங்களில் கட்டியுள்ள பயணிகள் நிழற்குடைகளால் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் கடலூர் ரோட்டில், சார்ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடைக்கு 100 மீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் வழக்கமாக பேருந்துக்காக பயணிகள் காத்திருந்து பேருந்து ஏறி செல்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு பயன்படும் வகையில் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்காமல் வேறு பகுதியில் நிழற்குடை கட்டப்பட்டு இதுவரை அதனை யாரும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும் நிழற்குடையை மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அதுபோல் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் அருகில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் இடத்தில் பயணியர் நிழற்குடை அமைக்காமல் வேறு இடத்தில் கட்டப்பட்டுள்ளதால் சமூக விரோத செயல்களுக்கும், கால்நடைகள் தங்குவதற்கும் பயன்பட்டு வருகிறது. பெண்ணாடம் புதிய பேருந்து நிலையம் அருகிலும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடைகளால் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படாமல் பல்வேறு இதர தேவைகளுக்கு பயன்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 4 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.10லட்சம் செலவில் பயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் பொதுமக்களுக்காக கட்டப்படாமல், ஒப்பந்ததாரர்களுக்காக  கட்டப்பட்டவையாகும். ஏனென்றால் முதலில் ஒரு இடத்தில் நிழற்குடை கட்ட அஸ்திவாரம் தோண்டுவார்கள். அப்போது அந்த இடத்தின் அருகிலுள்ள தனிநபர், தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கூறி இங்கு கட்ட வேண்டாம் என் கூறுவர். இதுபோல், ஒவ்வொரு இடமாக மாற்றும்போது போதிய அளவு கையூட்டு கிடைக்கும்.

கடைசியில் யாருக்கும் பயன்படாத இடத்தில் நிழற்குடையை ரூ.10லட்சத்தில் கட்டி விடுவர். அதுவும் தரமானதாக இருக்காது. நிழற்குடை கட்டப்பட்ட இடங்களில் பேருந்துகளை நிற்கவும் எந்த நடவடிக்கையும் போக்குவரத்து துறை எடுப்பதில்லை. இதனால் பழைய இடங்களிலேயே வெயிலிலும், மழையிலும் நின்று பொதுமக்கள் பயணிக்க வேண்டிய நிலை  உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் அது முழுக்க ஆளுங்கட்சியினரின் பணியாக உள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தாமலேயே பராமரிப்பின்றி கிடந்து, இருக்கைகள் மற்றும் தரைப்பகுதி அனைத்தும் சேதமடைந்து வீணாகிப்போகிறது. அதனை மீண்டும் பராமரிப்பு செய்வதாக கூறி தொடர்ந்து முறைகேடு நடக்கிறது. எனவே விருத்தாசலம், பெண்ணாடம் பகுதிகளில் பயனில்லாமல் உள்ள பயணியர் நிழற்குடைகளை சீரமைத்து, பொதுமககள் பயன்படுத்தவும், நிழற்குடை உள்ள இடங்களில் பேருந்துகளை நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,Vriddhachalam ,millions ,taxpayers , Vriddhachalam, Passenger Shadows, People Tax
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது