×

கொளுத்தும் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கோயில்களில் நிழற்பந்தல் அமைக்க வேண்டும்

* அறநிலையத்துறை உத்தரவு

வேலூர் : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோயில்களுக்கு வரும் பக்தர்களை பாதுக்கும் வகையில் பந்தல் அமைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை மீனாட்சி, ரங்கம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில், பழனி, திருந்செந்தூர் முருகன் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்களுக்கு வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகின்றனர்.

 வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியது. அதில், ‘கோடை காலங்களில் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், நீர் மோர், பானகம் வழங்குதல், நிழற்பந்தல்கள் அமைத்தல், நடைபாதைகளில் சணல் மிதியடிகள், அல்லது வெள்ளை நிற பூச்சு பூசுதல் போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஆகும் செலவை அந்தந்த கோயில் நிர்வாகத்தின் வருவாயில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் ஜலகண்டேஸ்வரர் கோயில், வள்ளிமலை முருகன், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் கோயில், படவேடு அம்மன் கோயில் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்துசமய அறநிலையத்துறை உத்தரவுப்படி உடனடியாக அந்தந்த கோயில் நிர்வாகங்கள் தரப்பில் கோடைகால சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees , temples,summer officials, tiruvannamalai,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி