×

தமிழகம் முழுவதும் லாரி திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

* ஜிபிஆர்எஸ் கருவி இல்லாவிட்டால் சிக்கல்

சேலம் : தமிழகம் முழுவதும் லாரி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்படாத லாரிகள் திருடு போகும்போது, அதனை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.50 லட்சம் லாரிகள் இயங்கி வருகிறது. இதை சார்ந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.தமிழகத்தில் இருந்து தான்,அதிகப்படியான லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.நேஷனல் பர்மிட் பெறப்பட்ட லாரிகள் இயங்குவதும், தமிழகத்தில் தான் மிக அதிகம். இதற்கு அடுத்தப்படியாக கர்நாடகா,மகராஷ்டிரா மாநிலங்களில் அதிக லாரிகள் இயங்குகிறது.

தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள், அவ்வப்போது கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது. கோடி கணக்கில் மதிப்புள்ள பொருட்களை கொண்டுச் செல்லும் போது, இத்தகைய திருட்டு சம்பவங்கள் அறங்கேறுகிறது. இது ஒருபுறம் இருக்க சமீபகாலமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பட்டறைகள் முன்பும்,பெட்ரோல் பங்க்குகள் முன்பும் நிறுத்தப்பட்டிருக்கின்ற லாரிகள் திருடப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் பரந்து விரிந்துள்ள திருட்டு கும்பல்,கைவரிசை காட்டி வருகிறது.லாரி டிரைவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு ஒரு தரப்பு திருட்டு கும்பல் லாரிகளை திருடுகிறது.மற்றொரு தரப்பு கும்பல்,சாலையோரம் நிறுத்தப்படுகின்ற லாரிகளை நோட்டமிட்டு,ஆட்கள் இல்லாதபோது திருடிச் சென்று வருகிறது. சேலம்,நாமக்கல்,தர்மபுரி,கரூர்,விழுப்புரம்,சென்னை பகுதிகளில் தொடர்ந்து லாரி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. இந்த வகையில் கடந்த ஆண்டில் 30க்கும் மேற்பட்ட லாரிகள் திருடப்பட்டிருப்பதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருடப்படுகின்ற லாரிகளை வேறு எங்கும் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபடாமல், நேரடியாக ஏதாவது பட்டறைக்கு கொண்டு சென்று உதிரிபாகங்களை கழற்றி தனித்தனியே விற்று காசு பார்க்கின்றனர். ஒரு லாரியை திருடினால், குறைந்தது ₹10 லட்சத்திற்கு விற்று விடலாம் எனக்கணக்கிட்டு இத்தகைய சம்பவங்களை திருட்டு கும்பல் அறங்கேற்றுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாமக்கல்லில் சிவகங்கையை சேர்ந்த கண்ணன் என்பவரது லாரியை ஒரு கும்பல் திருடிச் சென்றது. அந்த கும்பலின் தலைவனான சேலம் இடைப்பாடியை சேர்ந்த மாணிக்கம், சிறையில் இருந்தபடி கூட்டாளிகளை திரட்டி சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அப்போது, நாமக்கல் போலீசார்,லாரி திருட்டில் ஈடுபட்ட 7 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில்,திருடப்பட்ட லாரிகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்வோம் என தெரிவித்திருந்தனர்.

லாரி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அனைத்து லாரி உரிமையாளர்களும் தங்களது வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவிகளை பொருத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில லாரிகளில் இன்னும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்படாமல் இயங்கி  வருகிறது. அந்த லாரிகள் திருடு போகும்போது, கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.ஜிபிஆர்எஸ் கருவி இருந்தால், அது செல்லும் வழித்தடத்தை அறிந்து போலீசார் மடக்கி பிடித்து மீட்கின்றனர்.

இதுபற்றி லாரி உரிமையாளர்கள் கூறுகையில்,‘‘தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக லாரி திருட்டு அதிகளவு நடக்கிறது. இங்கு திருடப்படும் லாரிகளை வெளியூர்களுக்கு கொண்டுச் செல்லாமல், ஆங்காங்கே உள்ள பட்டறைகளிலேயே பிரித்து லட்சக்கணக்கில் விற்று விடுகின்றனர். இதனால், திருடப்பட்ட லாரிகளை மீட்க முடியாமல் போகிறது. அதனால், லாரி உரிமையாளர்கள் அனைவரையும் தங்களது லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவிகளை பொருத்திட அறிவுறுத்தி வருகிறோம். மேலும், இத்திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேரத்தில் நெடுஞ்சாலைகளில் போலீஸ் ரோந்து அதிகளவு இருக்க வேண்டும்.அதனை போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கையாக முன் வைத்திருக்கிறோம்,’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,theft incidents ,Tamil Nadu , Lorry ,tamilnadu,Theft ,GPRS
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி