×

மதகுகள் இயக்கம் சீராக உள்ளது பலமாக இருக்கிறது பெரியாறு அணை

* துணை கண்காணிப்புக்குழு திருப்தி

கூடலூர் : பெரியாறு அணைப்பகுதியில் மதகுகள் இயக்கம் சீராக உள்ளது. அணையும் பலமாக உள்ளது என துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர். பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. குழு தலைவராக கொச்சி மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணபிரபு உள்ளார்.

தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் (பொ) சுப்ரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். பிப். 26ம் தேதி அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருந்தபோது, இக்குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டம் 112.80 அடியாக குறைந்துள்ள நிலையில் துணை கண்காணிப்பு குழுவினர், பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக குழு தலைவர் மற்றும் தமிழக பிரதிநிதிகள், தேக்கடி படகுத்துறையில் இருந்து தமிழக பொதுப்பணித்துறையின் கண்ணகி படகில் அணைப்பகுதிக்கு சென்றனர்.
பின்னர் துணைக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து ஆய்வு செய்தனர். மாலை குமுளியில் உள்ள மூவர் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வருமாறு:

* அணையின் சுரங்கப்பகுதியில் இருந்து நிமிடத்திற்கு 18.69 லிட்டர் தண்ணீர் வெளியேறுவது கணக்கிடப்பட்டது. இது தற்போதைய அணை நீர்மட்டமான 112.80 அடிக்கு ஏற்றாற்போல் உள்ளதால் அணை பலமாக இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.

* அணையின் 13 மதகுகளில் 2 மற்றும் 8வது மதகு இயக்கி சரிபார்த்ததில் மதகுகளின் இயக்கம் சீராக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

* கடந்த மழை வெள்ளத்தில் சேதமடைந்த பெரியாறு அணைக்குச் செல்லும் வல்லக்கடவு - சப்பாத்து பாலம் தற்காலிகமாக சீரமைத்துள்ள நிலையில், அதை நிரந்தரமாக சீரமைக்க தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

* மே இரண்டாவது வாரத்தில் அணையில் கண்காணிப்புக்குழு ஆய்வு நடத்தும். அதற்கு முன்பாக துணைக்குழு ஆய்வு நடத்தும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவுகள் கண்காணிப்புக்குழு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Periyar , Periyaru Dam,Shutters ,Assistant Monitoring Committee
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...