×

இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் ராகுலிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு திடீர் நோட்டீஸ்

புதுடெல்லி: இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பதாக கூறப்படும் புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பாஜ எம்பி.யான சுப்பிரமணிய சுவாமி சமீபத்தில் கடிதம் எழுதினார். மேலும், ‘இங்கிலாந்தில் உள்ள ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக கடந்த 2003ம் ஆண்டு முதல் ராகுல் இருந்து வருகிறார். அந்த நிறுவனம் 2005ம் ஆண்டு அக்டோபர் 10, 2006ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதிகளில் அளித்த ஆண்டறிக்கையில்,  ராகுல் காந்தியின் பிறந்த நாள் ஜூன் 19, 1970 என்றும், அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் குறிப்பிட்டு உள்ளது’ எனவும் அந்த கடிதத்தில் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்ற புகார் தொடர்பாக தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டை இரண்டு வாரங்களில் தெரிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.இந்த நோட்டீசுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி பிறப்பால் இந்திய குடிமகன் என்பதை இந்த உலகமே நன்கு அறியும். வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் துன்பம், கருப்பு பணம் இவற்றை பற்றி பதிலளிக்க பிரதமரால் முடியவில்லை. எனவேதான், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தனது அரசு மூலமாக போலி கதைகளை கூறி நோட்டீஸ்  அனுப்புகிறார்,” என்றார்.  

இந்தியாவுக்கே தெரியும்
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொது செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, “ராகுல் இந்தியர் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தெரியும். அவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்ததை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள்,” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government of India ,UK ,Rahul Gandhi , UK ,Citizenship , Rahul, Central Government
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...