×

40 எம்எல்ஏ.க்களை இழுப்பதாக கூறிய மோடி வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கடிதம்

மேற்கு வங்க மாநிலம் ராம்பூரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த மோடி, `தன்னுடன் 40 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள்  தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதும் கட்சி மாறுவார்கள்’ என்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.இது குறித்து டிவிட்டரில் பதிலளித்த திரிணாமுல் தலைவர் தெரிக் ஓ பிரையன், `பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறாரா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறாரா? அவரது  தூண்டுதல் பேச்சு, குதிரை பேரம் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும்’ என பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் நேற்று இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதில், `நேற்று முன்தினம் ராம்பூரில் பிரதமர்  மோடி பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர் கூறியது உண்மை என்பதற்கு சான்று இருக்கிறதா? இல்லையெனும் பட்சத்தில் அவரது வேட்பு மனு ரத்து  செய்யப்பட வேண்டும்.

வாக்குகளை பெறுவதற்காக வாக்காளர்கள் மத்தியில் இது போன்று கெட்ட எண்ணத்தை உருவாக்கும் வகையில் மோடி பேசியுள்ளார். அவருடைய  குறுக்குத்தனமான பிரசாரத்தை கண்டிக்கிறோம். அவரது பேச்சு பிரச்னையை தூண்டும் வகையில் ஜனநாயகமற்ற முறையில் சட்டத்துக்கும் விரோதமாக உள்ளது. குதிரை  பேரம் நடக்கவிருக்கிறது என்று பேசிய அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் நடத்தை விதிகளையும் பாஜவின் தலைவர்களும் உறுப்பினர்களும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் போரில்  இன்னுயிர் நீத்த வீரர்கள், புல்வாமா தாக்குதலை சுட்டிக் காட்டி ஓட்டு வேட்டையாடிய பாஜ தலைவர்கள், நாளடைவில் மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்தனர். தற்போது  அதையும் கடந்து குதிரை பேரம் பற்றி பேசி வருகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

வெட்கமின்றி பேரம்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசியதாவது:திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 40 பேர் தன்னிடம் பேசுவதாக மோடியே கூறுகிறார். வெட்கமே இல்லாமல் அவர் எப்படி குதிரைப்பேரத்தில் ஈடுபடுகிறார் பாருங்கள்.  பிரதமர் பதவியில் தொடர அவருக்கு இனி எந்த தகுதியும் இல்லை. வாரணாசியில் அவரது வேட்புமனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,EC ,Trinamool , Claiming , 40 MLAs, candidature, Trinamul letter , Election Commission
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...