×

சுங்கவரி தவிர்க்கவே காரில் கட்சிக்கொடி: ஐகோர்ட் கிளையில் டிஜிபி பதில் மனு

மதுரை: டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக அரசியல் கட்சியினர் கார்களில், கட்சிக்கொடி மற்றும் பதவிகளின் பெயர் பலகைகளை பயன்படுத்துவதாக, தமிழக டிஜிபி தரப்பில் ஐகோர்ட் கிளையில் பதில்மனு தாக்கல்  செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியா முழுவதும் சாலைகளை பராமரிக்கும் தனியார் நிறுவனங்கள், சாலை இணைப்புப்பகுதியில்  ஹைமாஸ் விளக்கு அமைப்பது, வளைவு பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்துவது,  சாலைகளின் நடுவே செடிகள் நடுவது ஆகிய பணிகளை முறையாக செய்வதில்லை. இதன் காரணமாக தற்போது விபத்துக்கள்  அதிகரித்துள்ளன. விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 இம்மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘அரசியல் கட்சியினர் கார்களில் கட்சிக்கொடியை கட்டவும், தங்களது பதவி பெயர் பலகைகளை பயன்படுத்தவும் மோட்டார் வாகன சட்டப்படி அனுமதியில்லை’ என  போக்குவரத்துத்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘‘வாகனங்களில் அரசியல் கட்சிகளின் கொடி மற்றும் பதவிகளின் பெயரை எழுதிவைக்க மோட்டார்  வாகன சட்டப்படி எவ்விதமான அனுமதியும் இல்லை. விதிகளை மீறி கட்சிக்கொடி மற்றும் பதவியின் பெயர் பலகைகளை வைத்திருப்பது சோதனையின்போது தெரிய வந்தால் அதனை அகற்றி, அதிகபட்ச அபராதம்  வசூலிக்கப்படும். கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகள் உள்ள வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க சில நேரங்களில் போலீசார் தயங்குகின்றனர். இதனை பயன்படுத்தி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.  இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காகவும் கட்சிக்கொடிகளை பயன்படுத்துகின்றனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DGP , Tsankari, parikadi, jail branch, DGP, petition
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...