×

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பார் நாகராஜ், கூட்டாளிகளுக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ திட்டம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் பார் நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசபடம் எடுத்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன்,  சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் தொடரப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு  தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ விசாரிக்க துவங்கியது. சிபிஐ ஐஜி விப்லஸ் குமார் சவுத்ரி, ஏ.எஸ்.பி.கலைமணி, இன்ஸ்பெக்டர் விஜயா வைஷ்ணவி உள்ளிட்ட சிபிஐ  அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் ஒப்படைத்தார். இதனைதொடர்ந்து சிபிஐ ஐஜி விப்லஸ்குமார் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள்  நேற்று முன்தினம் பொள்ளாச்சி சென்று குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேர் மற்றும் புகார் கொடுக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள பார் நாகராஜ், பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகியோரை விசாரிக்க சிபிஐ  அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, இவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் மிக ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.  அதிகாரிகள் எங்கு தங்கியுள்ளனர், யாரை சந்திக்கின்றனர் என்பது உள்ளூர் போலீசாருக்கே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,CBI ,allies , Pollachi's Sexual Affairs, Bar Nagaraj, Partner, Summon, CBI
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு