×

இலங்கை குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க அதிகபட்ச நிதி உதவி வழங்கப்படும்: அதிபர் சிறிசேனா உறுதி

கொழும்பு: ‘தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க அதிகபட்ச நிதி உதவி வழங்கப்படும்,’ என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஓட்டல் உரிமையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் பலியாயினர். இதில், 40க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். 3 தேவாலயங்களுடன், வெளிநாட்டு பயணிகளை குறிவைத்து, 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் அரங்கேற்றினர். இந்த குண்டுவெடிப்பால், இலங்கையின் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் 5 சதவீத வருவாய் சுற்றுலாவின் மூலம் கிடைக்கிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளை இலங்கை அதிகம் நம்பி உள்ளது. கடந்த 2018ல் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 23 லட்சம் பேர் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டுமே 4.5 லட்சம பேர். இந்தாண்டு இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நடந்த குண்டுவெடிப்பால் தற்போது இலங்கைக்கு சுற்றுலா வரவே பலர் அஞ்சுகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தங்கள் குடிமக்களை  எச்சரித்துள்ளது. இதனால், பல ஓட்டல்களில் முன்பதிவாகியிருந்த வெளிநாட்டவர்கள் அவற்றை ரத்து செய்துள்ளனர்.  குண்டுவெடிப்பால் சுற்றுலா துறை துவண்டுபோயுள்ள நிலையில், அதிபர் சிறிசேனா தலைமையில் ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுற்றுலாவை நம்பி பல கோடி முதலீடு செய்திருப்பதாகவும், தற்போது கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அரசு உதவ வேண்டும், அடுத்த 2 ஆண்டுக்கு கடன் தள்ளுபடி போன்றவை வழங்க வேண்டுமென ஓட்டல் உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட அதிபர் சிறிசேனா, சுற்றுலா துறை மீட்க ஓட்டல் நிறுவனங்களுக்கு தேவையான அதிகபட்ச நிதி உதவி வழங்குமாறு இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓட்டல் உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சரவை துணைக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் சிறிசேனா உறுதி அளித்துள்ளார்.
குண்டுவெடிப்பால் சுற்றுலா வளர்ச்சி 30% சரிந்து ரூ.10,500 கோடி அந்நிய செலவாணி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இலங்கை மீள குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும்.

அமெரிக்கா எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி வான்ஹார்ன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஈஸ்டர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகள் மேலும் பல பயங்கர குண்டுவெடிப்புகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

9 நாட்களுக்கு பின் தடை நீங்கியது
 
இலங்கையில் கடந்த 21ம்தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய பல சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. இனவாத கருத்துக்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பகிர்வதை தடுத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளங்கள் மீதான தற்காலிக தடை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வவுனியா ஓட்டலில் வெடிகுண்டு பறிமுதல்

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புளியங்குளத்தில் செயல்பட்ட ஓட்டலின் விடுதி மற்றும் கழிவறையில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கழிவறையில் புதைக்கப்பட்டிருந்த 2 கையெறி குண்டுகள், 3 கண்ணிவெடி, 15 தோட்டாக்கள், 2 ஆர்பிஜி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே இந்த ஓட்டல் குறித்து பல்வேறு சர்ச்சையான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தொடர்ந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


42 பேர் வெளிநாட்டினர்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டை சேர்ந்த 42 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 11 பேர். இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 6 பேர், அமெரிக்கா, ஜப்பான், வங்கதேசம், நெதர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள் தலா 1, சீனா 4, டென்மார்க் 3, சவுதி, ஸ்பெயின், துருக்கியை சேர்ந்தவர்கள் தலா 2, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா-இலங்கை ஆகிய இருநாட்டு குடியுரிமை வைத்துள்ளோர் தலா 2 பேர் உள்ளிட்டோர், சுவிஸ்-நெதர்லாந்து மற்றும் நெதர்லாந்து-இலங்கை ஆகிய 2 நாட்டு குடியுரிமை வைத்திருப்போர் தலா ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 12 வெளிநாட்டவர்கள் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lankan , Sri Lanka, blast, tourism, financial assistance, President Sirisena, confirmed
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!