×

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை பச்சையப்பன்  கல்லூரி முதல்வராக சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நந்தினி உள்ளிட்ட 7 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முதல்வர் நியமனத்தை ரத்து செய்து  உத்தரவிட்டார். மேலும், நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவும், முதல்வர் தேர்வு நடைமுறைகளை ரத்து செய்தும், புதிதாக தேர்வு நடைமுறைகளை  மேற்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

 இந்த உத்தரவை எதிர்த்து சேட்டு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.எம்.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, சேட்டுவின் நியமனம் திரும்பப் பெறப்பட்டு, மூத்த பேராசிரியரான அருள்மொழிச்செல்வன் முதல்வர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கல்லூரி  முதல்வர் சேட்டு நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.அதேசமயம், முதல்வர் தேர்வு நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை  நடத்தவும், முதல்வர் தேர்வு நடைமுறைகளை ரத்து செய்தும், புதிதாக தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 17ம்  தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pachaiyappa ,college principal , Pachaiyappa College, Chief Ministerial appointment, Vigilance Department, Investigation, Court
× RELATED சோழவந்தானில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்