×

தனியார் குடோனில் ரேக்குகள் சரிந்ததில் பழ குவியலில் 3 மணிநேரம் சிக்கிய தொழிலாளர்கள்; 13 மணி நேரத்துக்கு பின் ஒருவர் மீட்பு

சென்னை: பல்வேறு பழங்கள் பெட்டியாகவும் தனியாகவும் அடுக்கி வைத்திருந்த இரும்பு ரேக்குகள் திடீரென சரிந்து குடோனில் வேலை செய்து ெகாண்டிருந்த 4 ஊழியர்கள் சிக்கினர்.  ஆவடி அடுத்த மேட்டுப்பாளையம்  கிராமத்தில் குளிர்சாதன பழக்கிடங்கு உள்ளது. இது சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் உரிமையாளர் சென்னை செனாய் நகரை சேர்ந்த சுரேஷ். இங்கு அசாம் மற்றும் உ.பி. மாநிலத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள் வேலை  செய்து வருகின்றனர். இந்த குடோனில் 2 ஆயிரம் டன் எடையுள்ள பழங்கள் பதப்படுத்தப்படுகிறது. இந்த குடோனுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் ஆப்பில் இருந்து ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் கன்டெய்னர் மற்றும்  லாரிகள் மூலம் வருகிறது.  அவற்றை இந்த குளிர் சாதன கிடங்கில் பதப்படுத்தி வைத்து பின்னர் சென்னை மற்றும் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், இந்த குடோனுக்கு, கன்டெய்னர் லாரிகள் மூலம் வந்த பழங்களை ஊழியர்கள் இறக்கி ரேக்கில் அடுக்கி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரேக் கீழே சரிந்தது.  540 டன் பழங்கள் இருந்த நூற்றுக்கணக்கான பெட்டிகள் சரிந்து விழுந்தன. இதில், தொழிலாளர்கள் ஆரிப் (23), ஜாரூல் (24), செய்யது ஹக் (22), ஹையத்துல் ஹக் (21) ஆகியோர் பழங்களுக்குள் சிக்கி அலறி துடித்தனர். சத்தம்  கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்தனர். மேலும், அவர்கள் உரிமையாளர் சுரேஷுக்கு தகவல் கொடுத்தனர். அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கிய 4 தொழிலாளர்களை மீட்கும்  பணியில் ஈடுபட்டனர். மீட்புப்பணியில் பொக்லைன், கிரேன் உள்ளிட்ட இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மூன்று மணி நேரத்துக்கு பிறகு பழங்களை அகற்றிவிட்டு ஆரிப், ஜாரூல், செய்யது ஹக் ஆகியோரை மீட்டு,  ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், பழங்களுக்கு இடையில் சிக்கியிருந்த ஹயதுல் ஹக்கை 13 மணி நேர போராட்டத்துக்கு பின்பு  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் பழக்கிடங்கு உரிமையாளர் சுரேஷிடம்  விசாரிக்கின்றனர். மேலும், இந்த குடோனில் பழங்கள் அழுகாமல் இருக்க ஜீரோ டிகிரி செல்சியசில் பழங்களை பதப்படுத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chicken workers ,collapse ,recovery , Private kuton, racks, fruit pile, workers
× RELATED உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய...