×

சர்ச், ஓட்டல்களில் 250 பேர் பலியான சம்பவம்: இலங்கையை சேர்ந்த 3 பேர் சென்னையில் சிக்கினர்

சென்னை: சென்னை பூந்தமல்லியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிடித்தனர். இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் 3  தேவாலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில் ஓட்டல்கள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 250க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் என்று தெரியவந்தது. மேலும், தாக்குதலில் தீவிரவாத கும்பலின் தலைவனும் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து,  இலங்கையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயல் இழக்கச் செய்யும்போது வெடித்தன. அதில் உயிரிழப்புகள் இல்லை. ஆனாலும் இலங்கையில் தொடர்ந்து பீதி நிலவுகிறது. அதைத் தொடர்ந்து  ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இலங்கை ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் சுற்றி வளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. அதில் வீட்டுக்குள் இருந்த தீவிரவாதிகள் குழந்தைகள், மனைவிகளுடன் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதில் 15 பேர் உயிரிழந்தனர்.  மற்றொரு இடத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் தினமும் தீவிரவாதிகள் வேட்டை நடந்து வருகிறது. இந்தநிலையில், இலங்கை தீவிரவாதிகளிடம் நடத்திய  விசாரணையில் இந்தியாவில் இருந்தும் இலங்கையில் உள்ள தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபரை போலீசார் பிடித்து  விசாரித்தபோதுதான், இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிந்தது. இதை நமது உளவுத்துறையினர் இலங்கை அரசுக்கு தெரிவித்தனர்.
 
 ஆனால் அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவுதான், இந்த தாக்குதல் சம்பவம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக என்ஐஏ போலீசார் மற்றும் தமிழக உளவுத்துறை போலீஸ்  அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.மேலும் மத்திய உளவு அமைப்புகள் இந்தியாவில் இருந்து இலங்கை செல்லும் தொலைபேசி அழைப்புகளை இடைமறித்து கேட்டு வந்தனர். அதில்,  சென்னை மன்னடியில் தீவிரவாதி என்று சந்தேகப்படும் நபர் தங்கியிருப்பதும், அவர் இலங்கையில் உள்ள சில சந்தேக நபர்களுடன் சில திட்டங்கள் குறித்து பேசுவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஐஜி ஈஸ்வரமூர்த்தி,  எஸ்பி அரவிந்தன், அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மற்றும் அதிகாரிகள் மன்னடியில் தங்கியிருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில், பூந்தமல்லியில், கோல்டன் ஓபுலன்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 2 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் கடந்த 3 மாதங்களாக சென்னையில் இருப்பதும் தெரிவந்தது. இதனால் அந்த  குடியிருப்பில் நேற்று இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு மொத்தம் ஆயிரம் வீடுகள் உள்ளன. இதனால் கேட்டுகளை பூட்டி விட்டு சோதனை நடத்தினர். பலர் வீடுகளை விட்டு வெளியில் வரவில்லை.  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், போலீசார் சோதனை நடத்துவதாகவும் தெரிந்து பலர் பீதியடைந்தனர்.  இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

அதைத் தொடர்ந்து பிடிபட்ட 3 பேரையும் தனியாக அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒருவர் இலங்கையில் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று தெரியவந்தது. அவர் கள்ளத்தோணி  மூலம் சென்னைக்கு தப்பி வந்துள்ளார். மற்ற 2 பேரும் விமானத்தில் சென்னை வந்துள்ளனர். ஆனால் இலங்கையில் குண்டு வெடிப்புக்கு முன்னர் சென்னை வந்துள்ளனர். ஆனாலும் பிடிபட்டவர்களுக்கும், இலங்கையில் உள்ள  தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : church ,hotels ,Sri Lanka , Church, hotels, 250 victims, Sri Lanka, Chennai
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...