கொரட்டூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்த காலம் முடிந்து 4 ஆண்டாகியும் முடிவுக்கு வராத சுரங்கப்பாதை பணிகள்: பொதுமக்கள் கடும் அவதி

அம்பத்தூர்: சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் 4 வழித்தடங்கள் உள்ளன. இதில் 2 இருப்பு பாதைகளில் மின்சார ரயில்களும், மற்ற 2 இருப்பு பாதைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினமும் 160க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், 50க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் அம்பத்தூர் அருகே கொரட்டூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சுற்றுப் பகுதிகளான சீனிவாசபுரம், பாலாஜி நகர், சிவலிங்கபுரம், எல்லையம்மன் நகர், சுப்புலட்சுமி நகர், அக்ரகாரம், கோபாலகிருஷ்ணன் நகர், ராஜிவ்காந்தி நகர், லேக்வியூ கார்டன், கே.எஸ்.ஆர் நகர், திருமலை நகர், காவியா நகர், சாரதா நகர், கண்டிகை, டி.வி.எஸ். நகர், அன்னை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, குப்புரெட்டி நகர், சிவானந்த நகர், சாந்தி காலனி, வெங்கடராமன் நகர், வன்னியர் தெரு, சாவடி தெரு உள்ளிட்ட நகர்களை சேர்ந்த மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த ரயில் நிலையம் அருகில் ரயில்வே கேட் உள்ளது. அடிக்கடி இந்த கேட் மூடப்படுவதால் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடிவதில்லை.

பொதுமக்கள், பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர், கேட் மூடப்படும் நேரத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் தண்டவாளத்தை கடக்க வசதியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி கொரட்டூர் ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை பணி தொடங்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை 34 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரம் கொண்ட வகையில் அமைக்கப்படுகிறது. 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், 6 ஆண்டுகளை கடந்தும் இதுவரை பணிகள் முடியவில்லை.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுரங்கப்பாதை இணைப்பு சாலை பணி அமைக்க ரூ.13.86 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. தற்போது, ரயில்வே எல்லை வரையிலான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது.

ஆனால், மாநகராட்சி பகுதிகளை இணைக்கும் சாலை பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் பயணிகள் தினமும் ரயில் நிலையத்திற்கு சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் பல ஆண்டாக மந்தகதியில் நடைபெறுவதால், கொரட்டூர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட நகர்களைச் சார்ந்த பொதுமக்களும் சென்னை, புறநகர் பகுதிக்கு சென்று வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இவர்கள் 5 கி.மீ தூரம் சுற்றி தான் தங்களது பணிக்காக சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் தங்களது பயண இடங்களுக்கு செல்ல முடிவதில்லை. இப்படி 6 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுரங்கப்பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில்  விரைந்து முடிக்க வேண்டும்,’’ என்றனர்.

மின்வாரியம் மெத்தனம்

நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சுரங்கப்பாதை பணி நடைபெறும் இடத்தில் மின்மாற்றி இடையூறாக உள்ளது. இதனை அகற்றக்கோரி மூன்று மாதத்திற்கு முன்பே மின்வாரியத்திடம் அதற்குரிய தொகையை செலுத்திவிட்டோம். ஆனாலும், மின்வாரிய அதிகாரிகள் அதனை அகற்றவில்லை. மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 3 தனிநபர்கள் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியுள்ளனர்.

வருகின்ற ஜூன் மாதம் நீதிமன்றத்தில் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். அதோடு மட்டுமில்லாமல், சுரங்கப்பாதை பணிகளுக்கு நிலத்தை தோண்டும்போது, நீரூற்று அதிகமாக இருப்பதால் மண்சரிவு ஏற்படுகிறது. இதனாலும், சுரங்கப்பாதை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் 6மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>