×

மணலி புதுநகரில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி வாலிபர் சுற்றிவளைத்து கைது: மேலும் இருவருக்கு வலை

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். மணலி புதுநகரில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த மாதம் 3ம் தேதி மர்ம நபர்கள் இந்த ஏடிஎம் மையத்தில் நுழைந்து, மெஷினை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், நீண்ட நேரம் முயன்றும், மெஷினை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பினர்.
 
சிறிது நேரம் கழித்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் மையம் வந்தபோது, மெஷின் உடைக்கப்பட்டு கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுபற்றி வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், நேரில் வந்து ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், மெஷினில் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.  

இதுகுறித்து வங்கி அதிகாரி மணலி புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆசாமிகள் உருவம் பதிவாகி இருந்தது. விசாரணையில், எர்ணாவூரை சேர்ந்த காமேஷ் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு, ரஞ்சித் என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் எர்ணாவூர் பகுதியில் பதுங்கியிருந்த காமேஷை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஷ்ணு, ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர். கைதான காமேஷ் மீது எண்ணூர், சாத்தங்காடு ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manila ,New Delhi , Manali, Puducherry, ATM, robbery, youth, arrested
× RELATED தென்காசியில் ஏடிஎம்மில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு